வைகை படுகையில் மரக்கன்று நட எதிர்ப்பு

மானாமதுரை : மானாமதுரை அருகே வைகை ஆற்றில் வனத்துறை மரக்கன்று நடுவதை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த வந்தவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மானாமதுரை தாலுகாவில் முத்தனேந்தல் குரூப்பிற்குட்பட்ட கிருங்காகோட்டை, பாப்பாமடை, ராஜகம்பீரம், ஆர்.புதுார், உடையாம்பட்டி, துத்திகுளம்,முனியாண்டிபுரம், சோமநாதபுரம் ஆகிய கிராமங்கள் வைகை ஆற்றின் கரையோரத்தில் அமைந்துஉள்ளது.

இக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழிலை மேற்கொண்டுஉள்ளனர். இங்குள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் தங்களது கால்நடைகளை அருகில் உள்ள வைகை ஆற்று படுகையில் மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்கின்றனர்.

இந்நிலையில் மாவட்ட வனத்துறை, உள்ளூர் வன உரிமை கிராம சபையிடம் எவ்வித ஒப்புதலும் பெறாமல் வைகை ஆற்று படுகையில் மரக்கன்று நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில செயலாளர் ராமமுருகன் மற்றும் நிர்வாகிகள்,கிராம மக்கள் மானாமதுரை தாலுகா அலுவலகத்திற்கு ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர்.

அவர்களை மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் துணை தாசில்தார் சரவணகுமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அழைத்து மேற்கண்ட இடங்களில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடுவதில்லை எனவும், நடப்பட்ட மரக்கன்றுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

Advertisement