கூடலுாரில் தடையில்லா சான்றை வனத்துறை வழங்கணும்; சட்டசபையில் நடந்த விவாதம்

சென்னை : அ.தி.மு.க., - ஜெயசீலன்: நீலகிரி மாவட்டம் கூடலுாரில், 10,000 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என, தேர்தல் வாக்குறுதி அளித்தேன்; அதை நிறைவேற்ற முடியவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்த 100 நாட்களில், மின் இணைப்பு வழங்கப்படும் என, முதல்வரும் உறுதி அளித்தார். மூன்றரை ஆண்டுகள் ஆகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து, மூன்று முறை சட்டபையில் கேள்வி எழுப்பியுள்ளேன். முதல்வரிடம் பேசி கோரிக்கை நிறைவேற்றப்படும் என, மின்துறை அமைச்சர் கூறினார். இதுவரை முதல்வர் அனுமதி தரவில்லையா?

அமைச்சர் செந்தில் பாலாஜி: வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், அந்த வீடுகள் உள்ளன. மின் இணைப்பு வழங்க வனத்துறை இதுவரை தடையில்லா சான்று வழங்கவில்லை. இருப்பினும், சிறப்பு முயற்சி எடுத்து பணிகளை முடிக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஜெயசீலன்: கூடலுார் மாவட்ட தலைமை மருத்துவமனையில், 28 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில், நான்கு பேர் தான் உள்ளனர். கேரளா, கர்நாடகா செல்லும் சாலையில் வாரந்தோறும் விபத்துகள் நடக்கின்றன. மலைப்பகுதி மக்கள் சிகிச்சை பெறுவதற்கு ஊட்டி, கோவைக்கு செல்ல வேண்டியுள்ளது. பந்தலுார் தாலுகா மருத்துவமனையில் உணவு பொருட்கள் வழங்கப்படவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் பொது மக்களிடம் வசூலித்து உணவு வழங்கும் சூழ்நிலை உள்ளது.

அமைச்சர் சுப்பிரமணியன்: கூடலுாரில் இருந்த வட்டார அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, கட்டுமான பணி நடக்கிறது. இப்பணி முடிந்ததும் போதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.

Advertisement