'விவேகானந்தர் இந்திய தேசத்தின் அடையாளம்'
மேட்டுப்பாளையம், : கோவை பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி, 12ம் தேதியை தேசிய இளைஞர் தின விழாவாக, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது.
இந்த ஆண்டு மேட்டுப்பாளையத்தில் தேசிய இளைஞர் தின பேரணியை, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் நடத்தியது. மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், இதன் துவக்க விழா நடைபெற்றது.
பள்ளி குழுத் தலைவர் தியாகராஜன் வரவேற்றார். ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய சுவாமி புத்திதானந்தர் மகராஜ் விழாவில், நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்கள் வகிக்கும் முக்கிய பங்கு, சுவாமி விவேகானந்தரின் சேவைகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு பற்றி, விளக்கி பேசினார். மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., அதியமான் விழாவுக்கு தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்து பேசுகையில், விவேகானந்தர் சிக்காகோவில் சர்வ சமய மாநாட்டில் உரையாற்றிய பின்னர், இந்திய தேசத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்தது. அவரை இந்திய தேசத்தின் அடையாளம் என்று சொல்லலாம்' என்றார்.
இளைஞர்களின் பேரணி, காரமடை சாலை வழியாக கோ ஆப்ரேட்டிவ் காலனியை அடைந்தது. இதில் ராமகிருஷ்ண வித்யாலய கல்லூரி மாணவர்கள், யுனைடெட் கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், காரமடை ஆர்.வி., கல்லூரி மாணவர்கள், வி.என்.கே மகளிர் கல்லூரி மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், உறுதிமொழியை வாசித்தார். ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய உதவி செயலர் சுவாமி தத்பாஸானந்தர், சாது பெருமக்கள், கல்லூரி பேராசிரியர்கள் முத்தையா, ஜெயக்குமார் உட்பட பலர், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.