வீடு ஜப்தியின் போது தீக்குளித்த பெண் பலி

பாலக்காடு : பாலக்காடு அருகே, வீடு ஜப்தி நடவடிக்கையின் போது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் உயிரிழந்தார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி கீழாயூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா, 48. இவர், 2015ல் ஷொர்ணூர் கூட்டுறவு வங்கியில், வீட்டை அடகு வைத்து இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தவறியதால், வட்டியுடன் கடன் தொகை தற்போது, 4.75 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இந்நிலையில், நேற்று மதியம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஜப்தி நடவடிக்கை எடுக்க வங்கி அதிகாரிகள் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

இதனிடையே, ஜெயா வீட்டினுள் சென்று மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்ட அவரை, அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக, பட்டாம்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement