மும்பை போலீஸ் எனக்கூறி ரூ.1.35 கோடி பறித்தவர் கைது
பாலக்காடு : மொபைல்போன் வீடியோ அழைப்பு வாயிலாக தொடர்பு கொண்டு, மும்பை போலீஸ் எனக்கூறி, 1.35 கோடி ரூபாய் பறித்த வழக்கில் ஒருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி, தன்னை மொபைல்போன் வீடியோ அழைப்பு வாயிலாக தொடர்பு கொண்டு, மும்பை போலீஸ் எனக்கூறி நம்ப வைத்து ஏமாற்றி, 1.35 கோடி ரூபாய் பணம் பறித்தாக, கேரளா போலீஸ் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார்.
சைபர் கிரைம் மாவட்ட எஸ்.பி., அஜித்குமாரின் அறிவுரையின்படி, டி.எஸ்.பி., பிரசாத் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சரின் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். பணம் பறித்தது கர்நாடக மாநிலம் பீதர் நவாத்கிரியை சேர்ந்த சச்சின், 29, என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரை, கர்நாடகா-, தெலுங்கானா எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தில் கேரள போலீசார் நேற்று கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர் சரின் கூறியதாவது: மும்பை போலீஸ் என்று கூறி, புகார்தாரரை மொபைல்போன் வாயிலாக வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்ட கும்பல், ஹவாலா பணம் தொடர்பான வழக்கில், உங்களது மொபைல்போன் எண் மற்றும் ஆதார் கார்டு ஆகியவை உட்பட்டுள்ளதால், உங்களை கைது செய்ய உள்ள என கூறி நம்ப வைத்துள்ளனர்.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்க பணம் செலவாகும் என கூறியுள்ளார். இதையடுத்து அந்த கும்பல் கூறிய வங்கி கணக்குகளில், 1.35 கோடி ரூபாயை புகார்தாரர் செலுத்தியுள்ளார். அதன்பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளார்.
விசாரணையில், புகார்தாரர், 55 லட்சம் ரூபாய் செலுத்திய ஒரு வங்கி கணக்கு போலி வணிக நிறுவனத்தின் பெயரில் உள்ளதும், அதை கையாளுவது சச்சின் என்பதும் தெரிந்தது.
அவர், சைபர் கிரைம் செய்யும் கும்பலைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. சச்சின் கையாளும் வங்கிக் கணக்கில் இருந்து மட்டும், 4.5 கோடி ரூபாய் பரிமாற்றம் நடந்ததுள்ளதும் தெரிந்தது. அவர் எத்தனை வங்கிக் கணக்குகள் வைத்திருந்தார், அவை வாயிலாக நடந்துள்ள பண பரிமாற்றம் எவ்வளவு, யாருக்கெல்லாம் தொடர்பு என்பது குறித்து விசாரித்து வருகின்றோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.