பள்ளியில் புதர்மயம்: மாணவியர் பய'மயம்'
அவிநாசி : அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இதில், 700க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் சத்துணவு மையம், மாணவிகள் கழிவறை பகுதி, விளையாட்டு மைதானம் மற்றும் வகுப்பறையில் பின்புறம் ஆகிய பகுதிகளில் பல மாதங்களாக பராமரிப்பின்றி களைச்செடிகள் முளைத்து முட்புதர்களாக காட்சியளிக்கிறது. அதிலும் விளையாட்டு மைதானத்தை சுற்றிலும், பெருமளவில் புதர்களாக உள்ளதால் மாணவியர் எந்நேரமும் அச்சத்துடனே விளையாடி வருகின்றனர்.
வகுப்பறை ஒட்டி வளர்ந்துள்ள களைச்செடி புதர்களால் ஜன்னல் வழியாக விஷப் பூச்சிகள் அடிக்கடி வகுப்பறைக்குள் நுழைவதாகவும் கூறுகின்றனர். கழிவறை செல்லும் பகுதியிலும் கழிவறையை சுற்றிலும் களை செடிகள் முளைத்து காணப்படுவதால் பல மாணவிகள் கழிவறையை பயன்படுத்துவதற்கே அச்சமாக உள்ளது என்கின்றனர்.
இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர்புனிதவதி கூறுகையில், ''அரசு கொடுக்கும் பள்ளி வளர்ச்சி நிதி ஒருமுறை பராமரிப்பு செலவிற்கு கூட போதவில்லை. இதில் அடிக்கடி எவ்வாறு சுத்தம் செய்து பராமரிக்க முடியும்? கடந்த மாதம் தான் சுத்தம் செய்துள்ளோம்,'' என்றார்.