சாலை விரிவாக்க பணி விரைந்து முடிப்பது அவசியம்
கோத்தகிரி : 'கோத்தகிரி கட்டபெட்டு - பில்லிக்கம்பை இடையே, சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுஉள்ளது.
கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில் இருந்து, தும்மனட்டி மற்றும் கக்குச்சி வழித்தடத்தில், 100க்கும் மேற்பட்ட குக் கிராமங்கள் உள்ளன.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, அரசு பஸ்கள் இவ்வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.
மேலும், பள்ளி வாகனங்கள் உட்பட, நுாற்றுக்கணக்கான தனியார் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றன. இதனால், இச்சாலையில் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில், சாலையை நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவுபடுத்தி, மழைநீர் தேங்காத வகையில், தேவையான இடங்களில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பகுதிகளில் அடுத்த வாரம் ஹெத்தையம்மன் திருவிழா துவங்க உள்ளது. பக்தர்களின் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.
பொது மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வாகனங்கள் சிரமம் இல்லாமல் சென்று வர ஏதுவாக, சாலை வளையில் பாதாள சாக்கடை அமைப்பதுடன், தார் போடும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்,' என்றனர்.