இந்திய அணியில் மீண்டும் ஷமி * இங்கிலாந்து தொடரில் இடம்

புதுடில்லி: இங்கிலாந்துக்கு எதிரான இந்திய 'டி-20' அணி அறிவிக்கப்பட்டது. 14 மாதத்திற்கு பின் முகமது ஷமி சேர்க்கப்பட்டார்.
இந்தியா வரவுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் போட்டி ஜன. 22 ல் கோல்கட்டாவில் நடக்கும். அடுத்து சென்னை (ஜன. 25), ராஜ்கோட் (ஜன. 28), புனே (ஜன. 31), மும்பையில் (பிப். 2) போட்டிகள் நடக்க உள்ளன. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சூர்யகுமார் தொடர்கிறார். அக்சர் படேல் முதன் முறையாக துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் ஷமி
வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 34, 14 மாதத்திற்குப் பின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். கடைசியாக 2023 உலக கோப்பை பைனலில் பங்கேற்றார். இதன் பின் கணுக்கால் காயத்திற்கு ஆப்பரேஷன் செய்து மீண்டார். சமீபத்திய சையது முஷ்தாக் 'டி-20', விஜய் ஹசாரே டிராபி (50 ஓவர்) போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால், மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார்.
சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, 'ஆல் ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங் இடம் பிடித்தனர். விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா நீக்கப்பட்டு, துருவ் ஜுரல் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய நிதிஷ் குமாரும் இடம் பெற்றுள்ளார்.
வேகப்பந்து வீச்சில் முகமது ஷமியுடன், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டனர். தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் அணியில் வாய்ப்பு பெற்றனர்.
சமீபத்திய உள்ளூர் போட்டிகளில் அசத்திய ஸ்ரேயாஸ், ரியான் பராக், ஷிவம் துபே, ரஜத் படிதர் சேர்க்கப்படவில்லை.

2 ஆண்டுக்குப் பின்...
வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, கடைசியாக 2022, உலக கோப்பை 'டி-20' தொடரில் (நவ. 10), இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் பங்கேற்றார். தற்போது இரண்டு ஆண்டுக்குப் பின் மீண்டும் 'டி-20' அணியில் இங்கிலாந்துக்கு எதிராக, களமிறங்க உள்ளார்.

அணி விபரம்

சூர்யகுமார் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், நிதிஷ் குமார், அக்சர் படேல் (துணைக் கேப்டன்), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜுரல்.

Advertisement