ஒலிம்பிக் பதக்கம் நோக்கி பயணம்: பி.டி.உஷா 'அட்வைஸ்'

மதுரை: ''மாணவர்களின் கனவு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதை நோக்கி இருக்க வேண்டும்,'' என பி.டி.உஷா தெரிவித்தார்.

மதுரையில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா கூறியதாவது: மத்திய அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருகிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஓட்டப்பந்தய பயிற்சிக்கான செயற்கை தடகள டிராக் வசதிகள் உள்ளன. நான் விளையாடும் கால கட்டத்தில் அத்தகைய வசதிகள் இல்லை.

என் வாழ்க்கையில், 1980 - 84 வரை ஏற்பட்ட மாற்றங்கள் அதிகம். தடகளத்தின் மீதான தீராத ஆர்வம் தான் வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தது. பயிற்சியின் போது காயமடைந்த நிலையில் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து நான் பின்வாங்கவில்லை.

மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியின் போது தான் செயற்கை தடகள டிராக்கை நேரில் பார்த்தேன். 'ஸ்பைக்ஸ் ஷூ' அணிந்ததும் அப்போது தான். என் வாழ்க்கையில் ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதற்கு முன் இரு போட்டிகளில் மட்டுமே பங்கேற்றேன். இப்போது, 14 வயது, 16, 18, 20, 22 வயதுடையோருக்கான போட்டிகளுக்கு உள்ள வாய்ப்புகளைப் போல அப்போது இல்லை.

பயிற்சியும் அதற்கான வாய்ப்பும் தெரியாத நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தேன். ஆனால், இந்தியாவிற்காக 103 சர்வதேச பதக்கங்களை வென்று கொடுத்தது எளிதான விஷயமல்ல.

இப்போதுள்ள மாணவர்களுக்கு பள்ளியிலேயே விளையாட்டுக்கான அனைத்து வசதிகளும் உள்ளன. உங்களது கனவு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதை நோக்கி இருக்க வேண்டும். அடித்தட்டு நிலையில் உள்ள தடகள வீரர்களுக்கு 'கேலோ இந்தியா' விளையாட்டு உதவுகிறது. ஹரியானா, தமிழகம், கேரளாவில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement