கனடா பிரதமராக போட்டியிடுபவர் நம்ம கோயம்புத்துார் அம்மணிங்க

கோவை:கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுகிறார். லிபரல் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், அக்கட்சி சார்பில், கனடா பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்பதால், கட்சித் தலைவராவதற்கு கடும் போட்டி நடக்கிறது.
கர்நாடகாவில் பிறந்து, கனடாவில் வசிக்கும் சந்திரா ஆர்யா, லிபரல் கட்சியின் எம்.பி.,யாக உள்ளார். இவர் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

அதே கட்சியைச் சேர்ந்த அனிதா இந்திராவும், பிரதமர் பதவிக்கான களத்தில் உள்ளார். போக்குவரத்து துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக அனிதா உள்ளார். இவர் கோவை, வெள்ளலூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

இவரது தந்தை வி. ஆனந்த், தாய் சரோஜ் டி ராம். தந்தை வழி தாத்தா, வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம். சுதந்திரப் போராட்ட தியாகியான வி.ஏ. சுந்தரம், மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு, காங்., கட்சியில் இணைந்து, சுதந்திர போராட்டத்தில் நேரடியாக பங்கேற்றார். பின், 1916ல் வெள்ளலூரில் இருந்து சென்னை இடம்பெயர்ந்து, வாரணாசி சென்றார்.

இவருக்கு நான்கு குழந்தைகள். இவர்களில் விவேகானந்தன், வி.ஆனந்த் என பின்னாளில் பெயர் மாற்றம் செய்து கொண்டார். ஆனந்த், பஞ்சாபைச் சேர்ந்த சரோஜை மணம் புரிந்து கொண்டார். இருவருமே மருத்துவர்கள். இவர்களின் மகள்தான் அனிதா ஆனந்த். தற்போது 57 வயதாகும் அனிதாவுக்கு நான்கு குழந்தைகள்.

குயின்ஸ் பல்கலையில் அரசியல் அறிவியல், ஆக்ஸ்போர்டு பல்கலையில் சட்டவியல், டல்ஹவுசி பல்கலையில் இளநிலை சட்டம், டொரான்டோ பல்கலையில் முதுநிலை சட்டம் பயின்றுள்ளார். டொரான்டோ பல்கலையில் பேராசிரியர் பணி உட்பட யேல், குயின்ஸ், வெஸ்டர்ன் பல்கலையிலும் பேராசிரியராக பணிபுரிந்துள்ளதுடன், முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார்.அனிதா இந்திரா, கனடாவின் முதல் ஹிந்து அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. கமலா ஹாரிஸ், ரிஷி சுனக் வரிசையில், இந்திய வம்சாவளியினரில் செல்வாக்கு மிக்கவராகவும் அனிதா இந்திரா கருதப்படுகிறார்.

Advertisement