கு.க., செய்யப்பட்ட நாய் குட்டி மாறியதுமன அழுத்தத்தில் இளம்பெண் விபரீதம்
ஈரோடு,:ஈரோடு, வெண்டிபாளையம், மணலி கந்தசாமி வீதியை சேர்ந்த சென்னியப்பன் மகள் ரம்யா, 19; பி.ஏ., தொலை துார கல்வியில் படித்து வந்தார். ஒன்றரை ஆண்டுக்கு முன் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து அவரது தாய், ஒரு நாய் குட்டியை எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த, ௧ம் தேதி, மாநகராட்சி பணியாளரிடம் குட்டிக்கு, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய கொடுத்துள்ளனர். ௮ம் தேதி குட்டியை திரும்ப தந்துள்ளனர்.
ஆனால், அந்த நாய் குட்டி தன்னுடையது இல்லை என்றும், தனது நாயை தேடி கண்டுபிடித்து, கொண்டு வந்து தரும்படி கூறியுள்ளார். இதனால் கடந்த இரு தினங்களாக மன அழுத்தத்தில் ரம்யா இருந்துள்ளார். வேறு நாய்குட்டி வாங்கி தருவதாக பெற்றோர் சமாதானப்படுத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பெற்றோர் வீட்டில் இல்லாதபோது, ரம்யா துாக்கு மாட்டி கொண்டார்.
அக்கம்பக்கத்தினர் ரம்யாவை காப்பாற்றி, கொல்லம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.