2 பேரிடம் ரூ.73 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரியில் ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்து, 2 பேர் 73 லட்சத்தை இழந்துள்ளனர்.

ரெட்டியார்பாளையம், காவேரி நகரை சேர்ந்தவர் சுரேஜ் பாபு. இவரை தொடர்பு கொண்ட மர்மநபர், பகுதி நேர வேலையாக ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபத்துடன் பணம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறினார்.

இதை நம்பி சுரேஷ்பாபு 66 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தார். அதற்கான லாபத் தொகையாக 4 கோடியே 50 லட்சம் ரூபாய் காட்டியுள்ளது. அந்த பணத்தை எடுக்க முயன்றபோது, எடுக்க முடியவில்லை.

அதன்பின், மர்மநபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகே ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது அவருக்கு தெரியவந்தது.

இதேபோல், அரும்பார்த்த புரம், வசந்தம் நகரை சேர்ந்த பரணிதரன், பகுதி நேர வேலையாக ஆன்லைன் பங்குச்சந்தையில் ரூ. 6 லட்சத்து 84 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்தார். இருவரும் பங்கு சந்தையில் முதலீடு செய்து, 72 லட்சத்து 99 ஆயிரம் பணத்தை இழந்துள்ளனர்.

இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'ஆன்லைன் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, மர்மநபர்கள் தொடர்பு கொண்டு ஆசைவார்த்தை கூறினால், அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.

பொதுமக்கள் ஆன்லைன் பங்குசந்தையில் முதலீடு செய்து லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருவது தொடர்கதையாக உள்ளது.

பொதுமக்கள் இதுபோன்ற ஆன்லைன் மோசடி கும்பலிடம் விழிப்புடன் இருக்க வேண்டும்' என தெரிவித்தனர்.

Advertisement