விசாரணை கைதி நெஞ்சு வலியால் சாவு

புதுச்சேரி : இரண்டு கொலை வழக்கில் கைதாகி காலாப்பட்டு சிறையில் இருந்த விசாரணை கைதி நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

வில்லியனுார், கொம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நாராயணன், 45; கடந்த 02.07.2022 அன்று கொம்பாக்கம் சாராயக்கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (எ) முருகையனை மரக்கட்டையால் அடித்து கொலை செய்தார்.

நாராயணனை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்த சிறையில் அடைத்தனர். இதுதவிர, கடந்த 2013ம் ஆண்டு ஒதியஞ்சாலையில் நடந்த கொலை வழக்கும் நாராயணன் மீது இருந்தது.

சிறையில் இருந்து ஜாமினில் வந்த நாராயணன், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நாராயணனை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. போலீசார் நாராயணணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்காக நாராயணன் புதுச்சேரி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறைக்கு சென்றவுடன், நாராயணனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

உடனடியாக சிறை காவலர்கள் நாராயணனை அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு நடந்தது. அப்போது, திடீரென நாராயணன் உயிரிழந்தார்.

காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, நாராயணன் உடலை ஜிப்மர் மருத்துவமனையில், மாஜிஸ்ரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Advertisement