அரசு கூறிய வழிமுறைகளில் காட்டுப்பன்றியை வனத்துறை சுட்டுப்பிடிக்க சாத்தியமில்லை

அருப்புக்கோட்டை : காட்டுப்பன்றிகளை வனத்துறை சுட்டு பிடிக்க அரசு கூறிய வழிமுறைகள் சாத்தியமில்லை என விவசாயிகள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

காவிரி வைகை குண்டாறு பாசன விவசாய சங்க மாவட்ட தலைவர் ராம் பாண்டியன், செயலாளர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:

சட்டசபையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி காப்புக்காடுகளில் இருந்து 3 கி.மீ., தள்ளி உள்ள விவசாய நிலங்களில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் வனத்துறை அதிகாரிகள் பன்றிகளை சுட்டுக் கொள்ளலாம் என்ற அனுமதி தரப்படுகிறது என கூறியுள்ளார்.

வனத்துறையில் பணியாற்றுபவர்கள் எண்ணிக்கை மாவட்ட அளவில் ஒரு சிறு எண்ணிக்கை தான்.

இதில் ஒரு சிலர்தான் துப்பாக்கி வைத்துக் கொள்ள முடியும். விருதுநகர் மாவட்டம் 100 கி.மீ., எல்லைகள் கொண்டது. ஒரு சிலரை வைத்து இத்தகைய நடவடிக்கை எடுப்பது சாத்தியமில்லாத ஒன்று.

மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் பல இடங்களில் நடந்து வருகிறது. பெரும்பாலான அடர்த்தியான அரசு கண்மாய் புறம்போக்கு பகுதிகளில் காட்டுப்பன்றி அதிகமாக உள்ளது.

ஆகவே அரசு மாவட்டம், தாலுகா, அளவில் விவசாய பிரதிநிதிகள், விவசாயிகள் அளவில் குழு அமைத்து உரிய முறையில் பயிற்சி எடுத்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அல்லது அதற்கு இணையானவர்களையோ இப்பிரச்சினை தீரும் காலம் வரைக்கும் பணியில் அமர்த்தி காட்டுப்பன்றிகளை சுட்டு அழிக்கின்ற பணியை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதம் இன்றி இந்த பணிகளை செய்ய வேண்டும்.

மேலும் இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு மீது பழியை போட்டு மாநில அரசு தப்பித்துக் கொள்ள கூடாது.

காட்டுப்பன்றியை வனவிலங்கு பட்டியிலிருந்து நீக்குவது என்பது கொள்கை முடிவு என தமிழக அரசு கூறாமல் உரிய நடவடிக்கை எடுக்கும் முயற்சி செய்ய வேண்டும்.

Advertisement