பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிய தமிழகம் டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு
மதுரை : ''பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 15 சதவீதம் அதிகரித்துள்ளது'' எனஅ.தி.மு.க., மருத்துவர்அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டினார்.
மதுரையில் நேற்று பெண்கள் பாலியல் உட்பட பல்வேறு தொல்லைகளிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள 'பெப்பர் ஸ்பிரே'யை வழங்கி டாக்டர் சரவணன் பேசியதாவது:
தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்த போது கனிமொழி 'தமிழகத்தில் மதுவால் அதிக அளவில் இளம் விதவைகள் அதிகரித்து விட்டனர்' என்று ஒரு தவறான கருத்தை சொன்னார். தற்போது தமிழகத்தில் ரூ.50 ஆயிரம் கோடி இலக்காக வைத்து மது விற்பனை அதிகமாக நடக்கிறது.
இதனால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இறக்கின்றனர். இதனால் 10 சதவீதம் விதவைகள் அதிகரித்துவிட்டனர். தி.மு.க., ஆட்சி நம்மை காப்பாற்றாது.நமக்கு நாமே நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று மக்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 15 சதவீதம் அதிகரித்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது என்றார்.