உறவுமுறை குறித்து ஈ.வெ.ரா., பேசியது அறிவுபூர்வமானது; திருமாவளவன் புது கண்டுபிடிப்பு
சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், திராவிட எதிர்ப்பு தான், தமிழ் தேசியம் என முடிவு செய்ததுடன், அவ்வாறு இருப்பவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
சீமானுக்கு, ஈ.வெ.ரா., அம்பேத்கர் இயக்கங்கள் தான் அடித்தளம் அமைத்து கொடுத்தன. ஆரம்ப காலங்களில், சமூக நீதி தான் சீமான் பேசிய அரசியல். இன்று, முன்னுக்கு பின் முரணாக பேசி, தமிழ் தேசியத்தை இனவாதமாக மாற்ற நினைக்கிறார்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், பிற மொழி, இன வெறுப்பில் ஈடுபட்டது இல்லை. பிரபாகரனின் பெயரை, சீமான் தன் நிலைப்பாட்டுக்கு பயன்படுத்துவது ஏற்புடையது இல்லை.
உறவுமுறை குறித்து, ஈ.வெ.ரா., பேசியது உண்மை தான். அதை அறிவியல்பூர்வமாக பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். உறவு முறையில் ஹிந்து மதம் சில புனிதத்தை கற்பிக்கிறது. அந்த கற்பிதத்தை அம்பலப்படுத்துவதற்காக, உறவுமுறை குறித்து ஈ.வெ.ரா., சொல்கிறார்; ஒழுங்கீனத்தை ஊக்கப்படுத்துவதற்காக சொல்லவில்லை. ஹிந்து மததத்தில், உறவு முறையில் புனிதம் ஏற்றப்பட்டுள்ளது; அதுதான் ஈ.வெ.ரா.,வின் பார்வை.
எந்த இடத்திலும் இன்றைக்கு நடைமுறையில் உள்ள ஒழுக்கங்களுக்கு எதிராக பேசவில்லை; எல்லாரும் வரம்பை மீறி செயல்பட வேண்டும் எனவும், அவர் வழிகாட்டவில்லை. அதனால், சீமான் ஆதாரமில்லாமல் பேசுவது கண்டனத்துக்குரியது. அதை மாற்றி கொள்ள வேண்டும்.
தமிழ் தேசம் என்பது, ஹிந்துத்துவ தேசம், மதவழி தேசியத்திற்கு எதிரானதே தவிர, தெலுங்கு மொழி உட்பட, பிற மொழி எதிர்ப்பில் இல்லை.
தி.மு.க., எதிர்ப்பு என்பது, சீமானுடைய தனிப்பட்ட அரசியல். தி.மு.க.,வை எதிர்க்கிறோம் என, திராவிட இயக்கங்களையும், ஈ.வெ.ரா.,வையும் எதிர்ப்பது கண்டிக்கத்தக்கது. சீமான் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; அணுகுமுறையை மாற்றி கொள்ள வேண்டும்.
ஈ.வெ.ரா., மீதான நன்மதிப்பை சீர்குலைப்பதில், அவருக்கு எந்த லாபமும் கிடைக்கப் போவதில்லை. அது சனாதன சக்திக்கு துணை போவதற்கு மட்டும் தான் பயன்படும். சீமானின் கருத்தை முதலில் ஆதரித்து இருப்பது, சனாதன பாசறையில் வேகமாக வளர்ந்த அண்ணாமலை தான். இதிலிருந்து, நாம் பேசுகிற அரசியல் யாருக்கு சாதகமாக இருக்கிறது என்று, சீமான் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.