'ஆயத்த ஆடைக்கான ஜி.எஸ்.டி.,யை அதிகரிப்பதை கைவிட வேண்டும்' ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

புதுடில்லி:ஆயத்த ஆடைகள் மீதான ஜி.எஸ்.டி., விகிதத்தை மாற்றும் முடிவை கைவிடுமாறு, மத்திய அரசுக்கு, இந்திய ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

ஆயத்த ஆடைகளுக்கு ஜி.எஸ்.டி.,யை அதிகரிக்கும் பரிந்துரையை கைவிடுவதுடன், தற்போதைய 5 மற்றும் 12 சதவீத ஜி.எஸ்.டி.,யே தொடர வேண்டுமென ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை, நேற்று மத்திய அமைச்சர்கள் குழுவிடம் சமர்ப்பித்தனர்.

இது குறித்து இந்திய ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளதாவது:

அமைச்சர்கள் குழு உடனான சந்திப்பில், நீடித்த வளர்ச்சி, ஆயத்த ஆடை துறையில் நிலவும் சவால்கள் உள்ளிட்ட 5 முக்கிய கொள்கைகள் தொடர்பான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

அதில், முதல் முக்கியமான கோரிக்கை, ஜி.எஸ்.டி.,விகிதத்தை மாற்றும் முடிவை கைவிடுவது ஆகும். இதனால், உற்பத்தி, விலை நிர்ணயம், மற்றும் நுகர்வோர் தேவையில் ஏற்படும் எதிர்மறை தாக்கங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக, பண்டிகை மற்றும் திருமணம் தொடர்பான ஆடைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்பதை எச்சரிக்கையாக பதிவு செய்துள்ளோம்.

மற்றொரு முக்கிய பரிந்துரை, ஆயத்த ஆடை தொழிலுக்கு பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். ஏற்றுமதி தவிர்த்து, உள்நாட்டு ஆயத்த ஆடை தயாரிப்பாளர்களுக்கு வட்டி மானிய சலுகையை அறிமுகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளது.

ஆயிரம் ரூபாய் வரை ஆடைக்கு 5 சதவீதமாக உள்ள ஜி.எஸ்.டி.,யை 1,500 ரூபாய் வரையும், அதற்கு மேல், 10,000 ரூபாயாக இருந்த ஜி.எஸ்.டி.,யை 12ல் இருந்து 18 சதவீதமாகவும் அதிகரிக்க அண்மையில் ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிந்துரைத்தது. 10,000 ரூபாய்க்கு மேற்பட்ட விலையுள்ள ஆடைகளுக்கு ஜி.எஸ்.டி., 28 சதவீதமாக நிர்ணயிக்கவும் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement