துாதரகங்கள் பெயரில் மோசடி போலி சான்று கும்பலுக்கு வலை
சென்னை: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர, போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த கும்பலை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில், என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில், மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர, துாதரகங்கள் அளித்து இருப்பது போல போலி சான்றிதழ்கள் தயாரித்து தரும் கும்பல் செயல்படுவது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.
இதை விசாரிக்குமாறு, சென்னை எழும்பூரில் செயல்படும் சி.சி.பி., மற்றும் சி.பி.சி.ஐ.டி., வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார், உதவி கமிஷனர் காயத்ரி தலைமையில் விசாரித்து வருகின்றனர்.
சென்னை பல்லாவரத்தில் உள்ள ஸ்ரீ சாய் கல்வி அகாடமி, போரூரில் உள்ள மேட்டா நீட், சாலிகிராமம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சாய் கேரியர் நெக்ஸ்ட் அகாடமி, அண்ணா நகரில் உள்ள, லைப் லிங்க் கல்வி ஆலோசனை மையம், அசோக் நகரில் உள்ள ஸ்டடி இந்தியா கல்வி ஆலோசனை மையம், குன்றத்துார் மாதா மருத்துவக் கல்லுாரி ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.
இச்சோதனையில், 105க்கும் மேற்பட்ட ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். டிஜிட்டல் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.