புதிய கூலி உயர்வு பெற்று தர விசைத்தறியாளர்கள் வேண்டுகோள்
சோமனுார்; ''புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, கோவை , திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 2.5 லட்சம் விசைத்தறிகள் இயக்கப் படுகின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 95 சதவீத விசைத்தறிகள், கூலியின் அடிப்படையில் இயங்குகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்.
கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக, முறையான ஒப்பந்தப்படி கூலி உயர்வு கிடைக்காமல், விசைத்தறியாளர்கள் கடும் நெருக்கடிக்குள் உள்ளாகி உள்ளனர். 2011ல் பெற்ற கூலியை தான் தற்போதும் பெற்று வருகின்றனர். இதனால், பல நெருக்கடிகளால் விசைத்தறியாளர்கள் சிக்கி தவிக்கின்றனர்.
புதிய கூலி உயர்வு பெற்று தர கோரி இரு மாவட்ட கலெக்டர்களிடம் கடந்தாண்டு முறையிட்டனர். பல காரணங்களால், பேச்சுவார்த்தை நடத்த தாமதம் ஏற்பட்டது. அதன் பின் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்க வில்லை. கடந்த, ஜன., 8ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையிலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்கவில்லை. இதனால், விசைத்தறியாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர். எப்போது ஒப்பந்தம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதற்கிடையில், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நேற்று சோமனுாரில், தலைவர் குமாரசாமி தலைமையில் நடந்தது. புதிய கூலி உயர்வு பெற்றுத்தர ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்து மாவட்ட நிர்வாகம் பேசவேண்டும். 3 ஏ 2 டேரிப்புக்கு, ஆண்டுக்கு ஆறு சதவீதம் மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கூலி உயர்வு பெற்றுத்தர கோரி, அமைச்சர்கள், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,களை சந்தித்து வலியுறுத்துவது, சோலார் மின் உற்பத்திக்கு முழு மானியம் அளிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயலாளர் கோபாலகிருஷ்ணன், துணைத்தலைவர் ஈஸ்வரன், பொருளாளர் பூபதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.