சமூக சேவைக்கான விருது: 3 பேருக்கு அறிவித்தார் தமிழக கவர்னர்!
சென்னை: சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த சொர்ணலதா, மதுரையை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோருக்கு 2024ம் ஆண்டுக்கான கவர்னர் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த சொர்ணலதா, மதுரையை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோருக்கு 2024ம் ஆண்டுக்கான கவர்னர் விருதுகள் வழங்கப்படும். சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கடந்த 33 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு உதவுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
கோவையை சேர்ந்த சொர்ணலதா, நரம்புத்தசை கோளாறுகள் மற்றும் பல்வேறு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதில் தன்னை ஈடுப்படுத்தி கொண்டுள்ளார். மதுரையை சேர்ந்த ராஜ்குமார் வீதிகளில் வாழும் முதியோர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னலமற்ற முறையில் சேவை செய்து வருகிறார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிட்லபாக்கம் ரைசிங் தொண்டு அறக்கட்டளைக்கும் விருது வழங்கப்படும். இந்த தொண்டு நிறுவனம், சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்த விழிப்புணர்வை பரப்புதல், நீர்நிலைகள் மேலாண்மை, பசுமையாக்கம், கழிவு மேலாண்மை போன்றவற்றில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது.
சமூக சேவை விருதிற்கு தலா ரூ.2 லட்சமும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதிற்கு ரூ.5 லட்சமும் விருது தொகை வழங்கப்படும். சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு வரும் ஜனவரி 26ம் தேதி, சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ள குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி விருதுகள் வழங்கி கவுரவிப்பார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.