மஹா கும்பமேளா கொண்டாட்டம் எப்படி இருந்துச்சு...! அனுபவத்தை பகிர்ந்த வெளிநாட்டினர்!

5

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் நடக்கும் மஹா கும்ப மேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டினர் தங்களது அனுபவத்தை பேட்டி அளித்து மகிழ்ந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில், மஹா கும்பமேளா இன்று (ஜன., 13) கோலாகலமாக துவங்கியது. வரும் பிப்.,26ம் தேதி (மஹாசிவராத்திரி) வரை நடக்கிறது. 144 ஆண்டுக்கு ஒரு முறை இந்த மஹா கும்பமேளா நடத்தப்படுகிறது. திரிவேணி சங்கமத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது.



காலை 9.30 மணி வரை 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். பிரயாக்ராஜ் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கி உள்ள நிலையில், உலகம் எங்கும் உள்ள மக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உத்தரபிரதேசத்தில் குவிந்துள்ளனர்.

கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எஸ்குர்டியா கூறியதாவது: இந்தியாவில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவில் நடக்கும் நிகழ்ச்சியை பற்றி தெரிந்து கொள்ள நான் ஆர்வமாக உள்ளேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கும்பமேளா நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். 4 நாட்கள் மட்டும் பங்கேற்றேன். அது போதுமானதாக இல்லை. தற்போது 30 நாட்கள் தங்கி, கும்பமேளா நிகழ்ச்சியை கொண்டாடி மகிழ உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


ஸ்பெயினில் இருந்து வந்த ஜேவியர் டி உஸ்கலேரியா கூறியதாவது: இதுவரை 6 முறை இந்தியாவுக்கு வந்துள்ளேன். தற்போது 2வது முறையாக கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளேன். இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இந்த நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது: மஹா கும்பமேளாவில் நடக்கும் ஆன்மீக நிகழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கே இருக்கும் இந்த ஆன்மீக உணர்வு உலகில் வேறெங்கும் இல்லை. எனக்கு இந்த அனுபவம் நன்றாக இருந்தது. எனக்கு பிடித்திருக்கிறது. மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


முதன்முறையாக இந்தியா வந்துள்ள, இத்தாலி நாட்டை சேர்ந்த மற்றொருவர் கூறியதாவது: இது ஒரு நல்ல அனுபவம். இது மிகவும் சக்தி வாய்ந்தது. நிறைய விஷயங்கள், நிறைய அனுபவங்கள் கிடைத்தன என்றார்.

Advertisement