என்னுடைய ஒருநாள் விடுப்பை வீணடித்து விட்டார்கள்; இண்டிகோ மீது இந்திய கிரிக்கெட் வீரர் அதிருப்தி

4


புதுடில்லி: இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் அலைக்கழிப்பால், சரியான நேரத்திற்கு சென்ற போதும், விமானத்தை தவறவிட்டு விட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா அதிருப்தி தெரிவித்துள்ளார்.


இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கு சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. அடுத்த மாதம் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு முன்னோட்டமாக இந்த தொடர் இருக்கும் என்பதால், இந்திய வீரர்களின் ஆட்டத்தை ஒட்டுமொத்த ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.


இந்தத் தொடருக்கு முன்னதாக, இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம்வீரர் அபிஷேக் ஷர்மாவுக்கு ஒருநாள் விடுப்பு வழங்கப்பட்டது. இதனால், டில்லி விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானத்தின் மூலம் அவர் தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.


அதன்படி, விமான நிலையத்திற்கு சென்ற அவர், இண்டிகோ விமான நிலைய ஊழியர்களின் அலைக்கழிப்பால் விமானத்தை தவறி விட்டுள்ளதாக அபிஷேக் ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.


அவர் விடுத்துள்ள பதிவில், "இது மோசமான அனுபவமாகும். விமானநிலைய ஊழியர்கள் மோசமாக நடந்து கொண்டார்கள். சரியான நேரத்திற்கு விமான நிலையத்திற்கு சென்றேன். ஆனால், கவுண்டரை மாற்றி மாற்றி என்னை அலைக்கழித்தனர். இதனால், விமானத்தை தவற விட்டேன். எனக்கு இருந்த ஒருநாள் விடுப்பு வீணாகிவிட்டது. அதன்பிறகும், கூட ஒரு உதவியும் அவர்கள் செய்து கொடுக்கவில்லை. இது மோசமான விமானசேவை. இதுபோன்ற தரமற்ற ஊழியர்களின் சேவையை நான் பார்த்ததே இல்லை", இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement