எச்.எம்., முடிவால் நேற்றும் விடுமுறை பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி
பொள்ளாச்சி,; தமிழகத்தில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்று, நேற்று (13ம் தேதி) பல தலைமையாசிரியர்கள் பள்ளிக்கு விடுமுறை அளித்துள்ளனர்.
தமிழகத்தில், இன்று பொங்கல் பண்டிகை, நாளை திருவள்ளுவர் தினம், 16ல் உழவர் தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், 14 முதல் 16ம் தேதி வரை, 3 நாட்கள் அரசு விடுமுறை இருந்தது.
இதனிடையே பணி நாளாக இருந்த, 17ம் தேதியும், அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, 25ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக மாற்றப்பட்டுள்ளது.
இதனால், 18 மற்றும் 19ம் தேதிகளில் சனி, ஞாயிறு என்பதால், தொடர்ச்சியாக, 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. அதன்படி, இந்த வாரத்தில், நேற்று (13ம் தேதி) மட்டுமே பணி நாளாக இருந்தது.
இந்த நாளிலும், விடுமுறையை எதிர்பார்த்து பலரும் இருந்த நிலையில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்று, பள்ளிக்கு மட்டும் விடுமுறை அளிக்கலாம் என, அரசு பச்சைக்கொடி காட்டி உள்ளது.
அதன்படி, தமிழகத்தில், பல அரசுப்பள்ளிகளுக்கு, தலைமையாசிரியர்கள் முடிவால், நேற்றும் விடுமுறை கிடைத்துள்ளது.
இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நேற்று (13ம் தேதி) விடுமுறையை ஈடு செய்ய பிப்., மாதத்தில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையை குறிப்பிட்டு, பள்ளி செயல்பட ஒப்புதல் அளித்த பின்னரே, அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால், பள்ளிகளுக்கு, தொடர்ச்சியாக, 8 நாட்கள் வரை விடுமுறை கிடைக்கிறது. இருப்பினும், சில தலைமையாசிரியர்கள் மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டு, விடுமுறை அளிக்க ஆர்வம் காட்டவில்லை.
இவ்வாறு, கூறினர்.