5 ஆண்டுகள் முடிந்தும் ரோடு வசதியின்றி மக்கள் ஏமாற்றம்
கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு வட்டாரத்துக்கு உட்பட்ட கிராமங்களில் ரோடு சீரமைக்கப்படாமல் இருப்பதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகள் உள்ளன. இதில் உள்ள பல கிராமப்புற சாலைகள் சீரமைப்பு செய்யப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு சில பகுதியில் மட்டுமே புதிதாக தார் மற்றும் கான்கிரீட் ரோடுகள் அமைக்கப்பட்டன. ஆனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்தும் பிரதான ரோடுகளான, இம்மிடிபாளையம், கருணாபுரி, கோதவாடி, - நல்லட்டிப்பாளையம், நெ.10.முத்தூர், சொக்கனூர், சொலவம்பாளையம் உள்ளிட்ட ரோடுகள் இன்றளவும் குண்டும் குழியுமாகவும், ஆங்காங்கே சேதமடைந்தும் இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
புதுப்பிக்கப்படாத இந்த ரோடுகளில், வேறு வழியின்றி பயணிக்கின்றனர். இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, விவசாயிகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். இந்த ரோடுகளில் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது.
இந்த ரோடுகளை சீரமைக்க வேண்டி பலமுறை அப்பகுதி மக்கள் மனு கொடுத்தும், கிராம சபைக் கூட்டங்களில் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியும், இதுவரை எந்த பயனும் இல்லாமல் போனது.
தற்போது ஊராட்சித் தலைவர்கள் பதவிக்காலமும் முடிந்து விட்டது. இனிமேலாவது, ஒன்றிய அதிகாரிகள் இதை கவனித்து சரி செய்ய வேண்டும், என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.