நடைபாதையை சூழ்ந்த புதரால் மக்கள் அவதி
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, ஒன்றிய அலுவலக வளாகத்தின் வெளிப்புறத்தில் நடைபாதை புதர் சூழ்ந்து இருப்பதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டில், பொள்ளாச்சி செல்லும் வழியில் ஒன்றிய அலுவலக வளாகம் அமைந்துள்ளது. இவ்வழியில் பொதுமக்கள் எளிமையாக பயணிக்க நடைபாவையும் அமைக்கப்பட்டது.
ஆனால் இந்த நடைபாதை முறையான பராமரிப்பு இல்லாததால், அதிக அளவு செடி கொடிகள் வளர்ந்து புதர் சூழ்ந்து இருக்கிறது. இதனால் ஒன்றிய அலுவலக வளாகம் வரும் பொதுமக்கள் பலர் சர்வீஸ் ரோட்டில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் பலர் தடுமாறிச் செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இது மட்டுமின்றி, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஒன்றிய அலுவலக வளாகத்திலிருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை மக்கள் சிரமம் இன்றி பயணிக்க, தற்காலிக மண் ரோடு அமைக்கப்பட்டது.
இதுவும் தற்போது செடி கொடிகள் படர்ந்துள்ளதால் மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, மக்கள் செல்லும் நடைபாதையில் உள்ள புதரை தேசிய நெடுஞ்சாலை சார்பாகவும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண் ரோட்டை ஒன்றிய அதிகாரிகள் சார்பிலும் மீண்டும் செடிகளை அகற்ற வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.