சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி போலீசார் அறிவுரை
பொள்ளாச்சி,; ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நெடுஞ்சாலைத்துறை, ஆனைமலை உட்கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடந்தது. இதில், சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர், தன்னார்வ அமைப்பினர் என, 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, உதவி கோட்டப் பொறியாளர் தினேஷ்குமார், வரவேற்றார். இதையடுத்து, பள்ளி வளாகத்தில் இருந்து, மாசாணியம்மன் கோவில் வரை பேரணி நடத்தப்பட்டது.
அப்போது, 'ெஹல்மெட் அணிந்து டூ வீலர் ஓட்டுவீர், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிவீர், மதுஅருந்தி வாகனம் ஓட்டாதீர்,' என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு, அனைவரும் ஊர்வலமாகச் சென்றனர்.
சாலை பாதுகாப்பை பின்பற்றுவது என, அனைவரும் உறுதிமொழியும் ஏற்றனர். முன்னாள் தலைமை போக்குவரத்து காப்பாளர் கமலக்கண்ணன், இளநிலைப் பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் பகுதியில், போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், பேரூர் டி.எஸ்.பி., சிவகுமார் மற்றும் கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி ஆகியோர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து பேசப்பட்டது. இதில், சிக்னலில் நின்று செல்லுதல், முறையாக ஹெல்மெட் அணிந்து பைக் பயணம் மேற்கொள்ளுதல், குறைவான வேகத்தில் பயணிப்பது, வாகன இடைவெளியை கடைப்பிடித்தல், சாலை விதிகளை கடைபிடித்து செல்வது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கிணத்துக்கடவு போலீசார், பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.