தேயிலை அருங்காட்சியகத்தில் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன்
மூணாறு: மூணாறில் தனியார் தேயிலை நிறுவனத்தின் அருங்காட்சியகத்தை ஹங்கேரி பிரதமர் விக்டர்ஓர்பன் ஒன்றரை மணி நேரம் பார்வையிட்டார்.
கேரளாவுக்கு ஜன.3ல் மனைவி, இரண்டு மகள்களுடன் வந்த ஹங்கேரி பிரதமர் விக்டர்ஓர்பன் நேற்று முன்தினம் மாலை மூணாறு வந்தார். மாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட விரிபாறை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.
அவர் நேற்று குடும்பத்தினருடன் பலத்த பாதுகாப்புக்கு இடையே மூணாறில் உள்ள கே.டி.எச்.பி. நிறுவனத்தின் தேயிலை அருங்காட்சியகத்திற்கு சென்றார். அவரை கம்பெனி நிர்வாக இயக்குனர் மாத்யூ ஆப்ரகாம் தலைமையில் வரவேற்றனர்.
தேயிலை அருங்காட்சியகத்தை பார்வையிட்டும், தேயிலை உள்பட பல்வேறு பொருட்கள் குறித்தும் கேட்டறிந்தார். ஒன்றரை மணி நேரம் அங்கிருந்த அவரை படம் எடுக்க பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
தேயிலை அருங்காட்சியகத்தில் இருந்து தங்கும் விடுதி சென்ற பிரதமர், மாங்குளம் ஊராட்சியில் காட்டு யானைகள் கூட்டமாக தண்ணீர் அருந்த வரும் ஆனக்குளம் பகுதிக்கு செல்ல திட்டமிடப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டது.