பயிற்சியாளர் காம்பிர் பதவி தப்புமா * சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பின் முடிவு
புதுடில்லி: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பின் பயிற்சியாளர் காம்பிர் பதவி குறித்து மறுபரிசீலனை செய்ய, பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது.
இந்திய அணி, கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் கடந்த ஆண்டு 'டி-20' உலக கோப்பை வென்றது. அடுத்து, டிராவிட் விலகியதால், 2023, ஜூலை மாதம், காம்பிர் 43, புதிய பயிற்சியாளர் ஆனார். இதன் பின் இந்திய அணிக்கு இறங்கு முகம் தான். இலங்கை மண்ணில் ஒருநாள் தொடரை இழந்தது.
சொந்தமண்ணில் நியூசிலாந்திடம் முதன் முறையாக டெஸ்ட் தொடரை இழந்தது. 10 ஆண்டுக்குப் பின் 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி தொடரில் இந்தியா கோப்பை நழுவியது. காம்பிர் பயிற்சியில் இந்தியா பங்கேற்ற 10 டெஸ்டில், 6ல் தோற்றது.
கேப்டன் ரோகித், 'சீனியர்' கோலி என இருவரது மோசமான பார்ம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பதவி ஆட்டம்
இதனால், காம்பிர் பதவியும் சற்று ஆட்டம் கண்டுள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா 1-3 என தோற்க முன்னணி வீரர்கள் இடையில் ஏற்பட்ட பிளவு தான் காரணம் என செய்தி வெளியாகின.
தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) 'ரிவியூ' செய்தது. இதில் பயிற்சியாளர் காம்பிர், சீனியர் வீரர்கள் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது உறுதியானது. ஆஸ்திரேலிய தொடரில், ஓட்டல் வசதி, பயிற்சி நேரம் குறித்து சீனியர் வீரர்கள் விடுத்த கோரிக்கைகள், காம்பிரை எரிச்சல் அடையச் செய்துள்ளது. மறுபுறம் காம்பிர் தரப்பில் இருந்து போதிய தகவல் பரிமாற்றம் இல்லை என வீரர்கள் உணர்ந்துள்ளனர்.
பி.சி.சி.ஐ., கோபம்
காம்பிர் தனது தனிப்பட்ட உதவியாளருக்கு அதிக முன்னுரிமை கொடுப்பது பி.சி.சி.ஐ.,யை 'அப்செட்' செய்துள்ளது.
நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''தேசிய தேர்வாளர்கள் செல்லும் காரில் காம்பிர் உதவியாளர் ஏன் அமர்ந்து வருகிறார். மூன்றாவது நபர் காரில் இருந்தால், எப்படி அணி குறித்து ஆலோசிக்க முடியும். அடிலெய்டில், பி.சி.சி.ஐ., விருந்தோம்பல் பகுதியில் காம்பிர், இவரை அமர வைத்தது ஏன், வீரர்களுக்கான ஐந்து நட்சத்தர ஓட்டலில் ஏன் உணவருந்த அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
இதனால் வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும், இந்திய வீரர்கள் டிரசிங் ரூம் இப்படித் தான், குழப்பமான சூழலில் இருக்கும் என நம்பப்படுகிறது.
காம்பிர் ஒப்பந்தம் 2027 உலக கோப்பை தொடர் வரை உள்ளது என்றாலும், செயல்பாடுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதுவரை காம்பிர் பெரிய வெற்றி எதுவும் கொடுக்காத நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பின் தப்புவது கடினம் தான்.
'சூப்பர் ஸ்டார்' எதிரி
காம்பிர் குறித்து பி.சி.சி.ஐ., தரப்பில் ஒருவர் கூறியது:
இந்திய அணியில் பல ஆண்டுகளாக நிலவி வரும் 'சூப்பர் ஸ்டார்' கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார் காம்பிர். 2012ல் கோல்கட்டா அணி கேப்டனாக இருந்த போது, சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., பைனலில், முன்னணி வீரர் பிரண்டன் மெக்கலத்தை நீக்கி, அதிர்ச்சி கொடுத்தார்.
ரஞ்சி தொடரில் டில்லி அணி கேப்டனாக காம்பிர் இருந்த போது, புற்கள் நிறைந்த ரோஷனரா மைதானத்தில் தங்களது போட்டிகளை விளையாட விரும்பினார். அப்போது இந்திய அணி வீரர் ஒருவர், தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஜாமியா மிலியா மைதானத்தில் விளையாடலாம் என்றார். இதை ஏற்க மறுத்தார் காம்பிர்.
இதுபோல இந்திய அணியில் தற்போதுள்ள சூழலை மாற்ற விரும்புகிறார். இது பல முன்னணி வீரர்களுக்கு ஒருவித தொல்லையாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கிரெக் சாப்பல் போல...
இப்போதுள்ள சூழலில் அணித் தேர்வு குறித்த விஷயங்களில், பயிற்சியாளர் அதிகம் தலையிடுவதை, தேர்வுக்குழு விரும்பவில்லை. ஆனால் காம்பிர், முன்னாள் பயிற்சியாளர் கிரெக் சாப்பல் போல செயல்பட விரும்புகிறார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வந்த சாப்பல், பயிற்சி முறை தொடர்பாக இந்திய அணியின் மூத்த வீரர்களுடன் கருத்து வேறுபாடுகளை வளர்த்தார். இதனால் ஏற்பட்ட குழப்பத்தில், பாதியில் பதவி விலகினார்.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., தரப்பில் ஒருவர் கூறுகையில்,'' ரவி சாஸ்திரி போல 'மீடியா' நண்பனாக இருக்க வேண்டும். அல்லது ஜான் ரைட், கிறிஸ்டன், டிராவிட் போல ஒதுங்கிக் கொண்டு, வீரர்களை பிரபலம் அடைய விடுங்கள். இந்தியாவின் சாப்பல் வழி ஒத்துவராது. ரவி சாஸ்திரி, டிராவிட் அல்லது காம்பிர் வருவர், செல்வர், ஆனால் வீரர்கள் தான் அணியில் நிலைத்திருப்பர்,'' என்றார்.
பி.சி.சி.ஐ., கண்டிப்பு
ஆஸ்திரேலிய தொடர் கோலி, பும்ரா தங்களது குடும்பத்துடன் தனியாக சுற்றுலா சென்றனர். மறுபக்கம் வீரர்கள் மட்டும் சென்றனர். பெர்த் டெஸ்டில் பெற்ற வெற்றியை கூட, இந்திய அணியினர் ஒன்றாக இணைந்து கொண்டாடவில்லை. தற்போது, தொடர் தோல்வியால் வீரர்களுக்கான சலுகைகளை குறைக்க பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பல்வேறு பரிந்துரை செய்யப்பட்டன. இதன் படி:
* 45 அல்லது அதற்கும் மேல் நீடிக்கும் தொடரில், குடும்பத்தினர் 14 நாள், வீரர்களுடன் தங்க அனுமதிக்கப்படுவர்.
* ஒருவேளை குறைந்த நாள் தொடர் என்றால், இது 7 நாளாக குறைக்கப்படும்.
* தொடர் முடியும் வரை வீரர்கள் தங்களது மனைவிகளுடன் தங்க முடியாது.
* அனைவரும் அணியினருக்கான பஸ்சில் தான் செல்ல வேண்டும்.
* காம்பிர் உதவியாளர் தனி ஓட்டலில் தங்க வேண்டும். வி.ஐ.பி., பாக்ஸ் அல்லது வீரர்கள் பஸ்சில் செல்ல அனுமதி கிடையாது.
* லக்கேஜ் எடை 150 கிலோவுக்கு மேல் இருந்தால், கூடுதல் தொகையை வீரர்கள் தான் செலுத்த வேண்டும்.