சர்வதேச பெட்ரோலிய சந்தையை மாற்றிய பிரதமர் மோடியின் முடிவு: துக்ளக் ஆண்டு விழாவில் பாராட்டு

8

சென்னை: அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை மீறி, பிரதமர் மோடி ரஷ்யாவில் இருந்து பெட்ரோலியம் வாங்க முடிவு செய்தது, சந்தையை முற்றிலும் மாற்றிவிட்டதாக துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார்.

துக்ளக் 55வது ஆண்டு நிறைவு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குரு மூர்த்தி பேசியதாவது:

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குச் செல்கிறார். நம் நாட்டில் இருக்கிறாரா? இல்லையா? என்று கிண்டலடித்தனர். ஆனால், 78 நாடுகளுக்குச் சென்றார். இதுவரை போகாத நாடுகளுக்கெல்லாம் போனார்.

அதனால் தான் உலக அளவில் பாரதத்திற்கு பெயரும், நெருக்கமும் கிடைத்துள்ளது. முஸ்லீம் நாடுகளோடு நெருங்கிய நட்பு கொண்ட நாடு என்ற நிலைமையும், அதன் மூலமாக பொருளாதார எழுச்சியும் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கர்களை நம்பாத அளவுக்கு சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், நமது நாட்டிடம் ஆலோசனை கேட்கிறார்கள். இதனை யாரும் பெரிதாக பேசுவதில்லை.

அமெரிக்காவும், இந்தியாவுக்கும் எலியும் பூனையும் போன்ற உறவு உள்ளது. நட்பும், எதிர்ப்பும் சேர்ந்தது தான் உறவு என்று சோ சொல்வார். எந்த நாட்டிடமும் நட்பு மட்டுமே உள்ளது என்றோ, எதிர்ப்பு மட்டும் இருக்கிறது என்றோ சொல்ல முடியாது.

உக்ரைன் விவகாரத்தில் நாம் நடுநிலையாக இருப்போம் என்று 2 மணி நேரத்தில் பிரதமர் மோடி முடிவு எடுத்தார். இதனால், பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அறிவித்தது. அதை மீறி ரஷ்யாவில் இருந்து பெட்ரோல் வாங்க முடிவு செய்தோம்.

இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியது. அவரது முடிவால் உலக பெட்ரோலிய சந்தையே மாறிவிட்டது.

உக்ரைன் போருக்கு முடிவுகட்டும் நிலையில் உள்ளவர் மோடி என்பதை அவர்களே கூறுகிறார்கள். தீர்க்கமான, துணிவான மற்றும் தன்னலமற்ற தலைவர் மோடி. அதனால் தான் கடந்த 7 ஆண்டுகளாக உலகின் பிரபலமான தலைவராக தேர்வு செய்யப்பட்டு வருகிறார். ஆனால், நம் நாட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவர் மீது மண்ணை வாரி வீசுகிறார்கள்.

முன்பெல்லாம் அரசியல் கூட்டணி அமையும் போது, அதற்கு ஒரு கொள்கையும், தலைமையும், போக்கும் இருக்கும்.
அப்போது காழ்ப்புணர்ச்சி இல்லை. இந்திரா எமெர்ஜென்சியை கொண்டு வந்த போது கூட கொள்கை ரீதியாக அவரை எதிர்த்தார்கள். இப்போது மோடி மீது அபாண்டங்கள் கூறுவது போல் நடக்கவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் வெளிநாட்டிற்குச் சென்று நம் நாட்டிற்கு எதிராகப் பேசுகிறார். தேச விரோத சக்திகளோடு தொடர்பு வைத்துக்கொண்டு, அவர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார். பங்குச் சந்தையில் நிலையற்ற நிலையை உருவாக்குகிறார். இதெல்லாம் அரசியலைத் தாண்டி பிரதமருக்கு நேரடியான சவாலாக உள்ளது.

இவ்வாறு ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார்.

Advertisement