வாங்குகிறாரா எலான் மஸ்க் : கற்பனை என்கிறது டிக்டாக்!
புதுடில்லி: அமெரிக்க அரசின் தடை அச்சுறுத்தலுக்கு மத்தியில் 'டிக்டாக்' செயலியை எலான் மஸ்க் வாங்க இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அந்த தகவலை, டிக்டாக் நிறுவனம் மறுத்துள்ளது.
உலகின் முன்னணி கோடீஸ்வரர் எலான் மஸ்க், ஏற்கனவே எக்ஸ் சமூக வலைதளத்தை வாங்கி விட்டார். அவர் வாங்க முடிவெடுத்தால், வாங்காமல் விட மாட்டார் என்பதற்கு அதுதான் உதாரணம்.
இந்நிலையில் அவர், டிக்டாக் சமூக வலைதளத்தை வாங்க இருப்பதாக, புளூம்பெர்க் நிறுவனம் பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.
'டிக்டாக்' என்ற சீன செயலியின் மூலம் குறு நிகழ்படங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் இயலும். பைட் டான்ஸ் எனும் சீன நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி செப்டம்பர், 2016ம் ஆண்டில் சீனாவில் அறிமுகமானது. ஒரு ஆண்டிற்குப் பிறகே இது வியாபார ரீதியிலாக செயல்பாட்டிற்கு வந்தது.
இளம் வயதினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பரபரப்பை ஏற்படுத்திய இந்த செயலி, சீன அரசு மற்றும் அந்நாட்டு ராணுவத்துக்கு பயனர்களின் தகவல்களை அனுப்புவதாக குற்றச்சாட்டு உள்ளது.
எனவே டிக்டாக் செயலியானது தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அதன் மொபைல் செயலி பிளேஸ்டோர் மற்றும் ஆப்ஸ்டோர் தளங்களிலிருந்து நீக்கப்பட்டது.இதேபோன்ற பிரச்னையை, அமெரிக்காவிலும் டிக்டாக் எதிர்கொண்டுள்ளது. டிரம்ப் பதவியேற்புக்கு முன்னதாகவே, டிக்டாக் செயலி தடை செய்யப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், சீன அதிகாரிகள் டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாடுகளை கோடீஸ்வரர் எலான் மஸ்க்கிற்கு விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகக் தகவல்கள் வெளியானது. இது குறித்து புளூம்பர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, நெட்டிசன்கள் பல விதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
எனினும் இது குறித்து டிக்டாக் நிறுவனம் தன் உறுதியான மறுப்பை தெரிவித்துள்ளது. எலான் மஸ்க் வாங்குகிறார் என்ற தகவல் முற்றிலும் கற்பனையானது என்று டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.