9 'பைக்'குகளை எரித்த சிறுவர்கள் நால்வர் கைது
சென்னை, சென்னை, அயனாவரம், சோலையம்மன் கோவில் குறுக்கு தெருவில், கடந்த 13ம் தேதி அதிகாலை 2:50 மணியளவில், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒன்பது இருசக்கர வாகனங்கள், அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தன.
கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் அதே பகுதியைச் சேர்ந்த மோசஸ், 57, ஜெதீஸ்வரன், 25, ஜெசிகலா, 23, உட்பட, ஒன்பது பேரின் இருசக்கர வாகனங்களும் நாசமாயின.
விசாரணையில், சிறுவர்கள் சிலர் வாகனங்களுக்கு தீ வைத்து செல்லும் காட்சிகள் 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன.
சம்பவத்தில் ஈடுபட்டது, அதே பகுதியை சேர்ந்த 15, 16 வயதுடைய இரு சிறுவர்கள் மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் என, நான்கு சிறுவர்கள் சிக்கினர்.
விசாரணையில், பக்கத்து தெருவான திருவள்ளூர் தெருவைச் சேர்ந்த ஹரிஸ் என்பவர், சம்பவம் நடந்த நாளில், தெருவில் 14 வயது சிறுவன் ஒருவன் பீடி புகைப்பதை பார்த்து, கண்டித்ததாக தெரிகிறது. இதனால், அத்திரமடைந்த சிறுவன், சக நண்பர்களுடன் சேர்ந்து ஹரிசின் வாகனத்தை எரிக்க சென்றுள்ளனர். இந்த தீ விபத்தில் மளமளவென பரவிய தீ மற்ற வாகனங்களிலும் பரவி உள்ளது. வழக்கமாக அப்பகுதியில் பைக் நிறுத்தும் ஹரிஸ், சம்பவத்தன்று வேறு இடத்தில் நிறுத்தியதால் அவரது வாகனம் தப்பியது.
கைதான நான்கு சிறுவர்களில் மூன்று பேர் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்; ஒரு சிறுவன் ஜாமினில் வெளிவந்தார்.