கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை அனுமதி பெற்று இயக்க 'நோட்டீஸ்'
திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கோவளத்தில், தனியார் நிறுவனம் சார்பில், கடந்த 2023-ம் ஆண்டு ஹெலிகாப்டர் சவாரி சுற்றுலா துவக்கப்பட்டது. பின்னர் திடீரென நிறுத்தப்பட்டது.
கடந்த 10ம் தேதி மீண்டும் துவங்கியது. நபர் ஒருவருக்கு 6,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் 5 நிமிடம் பறந்து, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இயற்கை காட்சிகளை, கழுகு பார்வையில் மக்கள் கண்டுகளித்தனர்.
இந்நிலையில், ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு, முறையான அனுமதி பெறவில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பினார்.
அதில் கூறியிருப்பதாவது:
கோவளத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்தும் தனியார் நிறுவனம், மத்திய விமான போக்குவரத்து ஆணையத்தின் அனுமதி பெறவில்லை. இப்பகுதியில் ஹெலிகாப்டர் இயக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, காவல் துறை, வருவாய் துறை, மாவட்ட நிர்வாகம் என, யாரிடமும் அனுமதி பெறவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹெலிகாப்டர்களை இயக்க, பல வரையறைகள் உள்ளன. காலமுறை பராமரிப்பு, அவற்றை இயக்குவதற்கான விமானிகள் தகுதி போன்றவை உறுதி செய்யப்படவில்லை. இது மக்களின் உயிரை பணயம் வைப்பதாகும்.
இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி, நேற்று மதியம் 1:00 மணி அளவில், திருப்போரூர் தாசில்தார் நடராஜன் தலைமையில், வருவாய் துறை அதிகாரிகள், கோவளம் ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்று 'சீல்' வைத்தனர். அதன் அலுவலகத்தில் அறிவிப்பு 'நோட்டீஸ்' ஒன்றையும் ஒட்டினர்.
இது குறித்து, திருப்போரூர் தாசில்தார் நடராஜன் கூறுகையில், ''மாவட்ட நிர்வாக அனுமதி ஏதும் பெறப்படவில்லை. பொதுமக்களை ஏற்றி செல்லும்போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அதற்கு மாவட்ட நிர்வாகம் பொறுப்பாகும். எனவே, மாவட்ட நிர்வாக உத்தரவின்படி 'சீல்' வைக்கப்பட்டது. ஆனால், ஹெலிகாப்டர் இயக்கும் நிர்வாகத்தினர் அனுமதி பெற்று இருப்பதாக கூறுகின்றனர். அவ்வாறு அனுமதி பெற்று இருந்தால், அதை காண்பியுங்கள் எனக் கூறியிருக்கிறோம்,'' என்றார்.
ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது தொடர்பாக, பா.ம.க., - வி.சி.க., இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக, பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கோவளம் பகுதியில் தனியார் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு, செங்கல்பட்டு கலெக்டர் தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, கடந்த ஓராண்டிற்கும் மேலாக வலியுறுத்தி வருகிறேன். உலகப்புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு இணையாக, பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் சதுப்பு நிலங்கள், சிறுதாவூர் ஏரி, நன்மங்கலம் காப்புக் காடு ஆகியவை, அதிக எண்ணிக்கையில் பறவைகள் வரும் பகுதியாகும். இயற்கையாக கிடைத்த இந்த வரத்தை பாதுகாக்க, கோவளத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கான அனுமதியை, தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அத்துடன், கிழக்கு கடற்கரை சாலையை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், அன்புமணியின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலரும், எம்.எல்.ஏ.,வுமான பாலாஜி வெளியிட்ட அறிக்கையில், ''கோவளம் ஹெலிகாப்டர் சேவை நிறுத்தப்பட்டது, அன்புமணி கோரிக்கையால் அல்ல. அத்தொகுதி எம்.எல்.ஏ., என்ற நிலையில், நான் தெரிவித்த புகாரின் காரணமாக தான் தடை விதிக்கப்பட்டுள்ளது,'' எனக் கூறியுள்ளார்.
ஹெலிகாப்டர் சுற்றுலா செல்வதற்காக, பயணியர் முன்பதிவு செய்து இருந்தனர். நேற்று 'சீல்' வைக்கப்பட்டு சேவை நிறுத்தப்பட்டதால், பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நிர்வாகம் சார்பில், முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திரும்ப வழங்கப்பட்டது.இது குறித்து, ஹெலிகாப்டர் நிறுவனத்தினர் கூறுகையில்,''முன்னறிவிப்பு ஏதுமின்றி 'சீல்' வைத்துள்ளனர். நாங்கள் அனுமதி பெற்றதற்கான ஆவணங்களை, தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்து, மீண்டும் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.