காரை தாக்க வந்த யானை -அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்
பந்தலுார் : பந்தலுார் அருகே முக்கட்டி என்ற இடத்தில், அதிகாலை சாலையில் சென்ற காரை தாக்க வந்த யானையால் வாகன ஓட்டுனர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பந்தலுார் அருகே நெலக்கோட்டை, முக்கட்டி பகுதிகளில் யானைகள் அதிக அளவில் உலா வருகின்றன. சில யானைகள் சாலையில் செல்லும் வாகனங்களை தாக்குவதால், இந்த வழியாக வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்னர், பெக்கி என்ற இடத்தை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் கேரளா மாநிலம் வயநாடு செல்வதற்காக, காலை, 5:00- மணிக்கு தனது காரில் சென்றுள்ளார். அப்போது, முக்கட்டி என்ற இடத்தில் சாலையில் நின்ற ஒற்றை யானை காரை தாக்குவதற்காக ஓடி வந்துள்ளது.
அப்போது, சாலையில் வந்த வேறு வாகன ஓட்டுனர்கள், ஹாரன் அடித்தும்; சப்தம் எழுப்பியும் யானையை திசை திருப்பி உள்ளனர். அரை மணி நேரம் சாலையில் நின்றிருந்த யானை, பின்னர் சாலையோர புதருக்குள் சென்றது.
தொடர்ந்து சாலையில் நின்றிருந்த கார்கள் சென்றன. இதனால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். எனவே, இந்த பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்.