கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தி சாலை மறியல்

ரிஷிவந்தியம் : பகண்டைகூட்ரோடு மும்முனை சந்திப்பில், கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தி சின்னக்கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வாணாபுரம் அடுத்த சின்னக்கொள்ளியூர் மாரியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால், பொதுமக்கள் பயன்படுத்தி வீணாகும் உபரிநீர் தெரு ஓரங்களில் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீர் நாளடைவில் சாக்கடையாக மாறுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

மாரியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தி சின்னக்கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை 11.40 மணியளவில் பகண்டைகூட்ரோடு மும்முனை சந்திப்பு பகுதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பகண்டைகூட்ரோடு சப்-இன்ஸ்பெக்டர் சேட்டு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து காலை 11.50 மணி மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.

மறியலால் அப்பகுதியில் 10 நிமிடம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

Advertisement