இளம்பெண் தற்கொலை: சப் கலெக்டர் விசாரணை
புவனகிரி : புவனகிரி அருகே கஸ்பா ஆலம்பாடியை சேர்ந்தவர் வரதராஜன்; கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்யா, 28; கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நேற்று முன்தினம், சுய உதவிக்குழு பணம் கட்டுவது தொடர்பாக கணவன் மனைவியிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதில் விரக்தியடைந்த சத்யா, வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். உறவினர்கள் மீட்டு புவனகிரி அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு நேற்று இறந்தார்.
இது குறித்து இறந்த சத்யா சகோதரர், தனது சகோதரி சாவில் சந்தேகம் இருப்பதாக மருதுார் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சத்யாவிற்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆகியுள்ளதால், வரதட்சணை கொடுமையாக இருக்குமோ என, சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணி விசாரணை நடத்தி வருகிறார்.