'7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் 40,168 மாணவர்கள் பலன்'

சென்னை : தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால், நான்காண்டுகளில் 40,168 அரசு பள்ளி மாணவர்கள் பலன் அடைந்துள்ளதாக, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தி.மு.க., அரசின், 'புதுமைப் பெண்' திட்டத்தால், உயர் கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 'தமிழ் புதல்வன்' திட்டத்தால் மாணவர்கள் உயர் கல்வி படிக்கும் சூழலை, முதல்வர் ஸ்டாலின் சாத்தியப்படுத்தி உள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகளை அதிகரிக்க, பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து தொழில்முறை படிப்புகளிலும் 7.5 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணம், விடுதி, போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட மொத்த கல்வி செலவையும், அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த நான்கு கல்விஆண்டுகளில், இத்திட்டத்தின் கீழ், 1165 கோடி ரூபாய்க்கு மேல் விடுவிக்கப்பட்டுள்ளது. 40,168 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் உயர் கல்வி பயில்வதில், எத்தகைய இடையூறையும் எதிர்கொண்டு விடக்கூடாது எனும் முதல்வரின் நடவடிக்கையால், இந்த சாதனை

நிகழ்ந்துள்ளது.

தொழில் படிப்புகளில், 35,530 பேர், மருத்துவம் சார்ந்த படிப்புகளில். 2382 பேர், வேளாண் படிப்புகளில், 1369 பேர், கால்நடை, மீன்வளம் சார்ந்த படிப்புகளில், 261 பேர், சட்டப் படிப்புகளில், 626 பேர் என, மொத்தம் 40,168 அரசு பள்ளி மாணவர்கள், கடந்த நான்காண்டுகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் பயனடைந்துள்ளனர்.

பாகுபாடின்றி அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதில், தி.மு.க., அரசு உறுதியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement