திரைகடலோடியும்... தமிழ் உரையாடுவோம் மனம் திறந்த விஜய்மணிவேல்
''சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் நான். சுமாராக அதுவும் அரியர்ஸ் வைத்த மாணவன் தான். ஏதோ ஒரு நம்பிக்கையில் படித்தேன்.. என் ஆசிரியர்கள் என்னை தட்டி கொடுத்து படிக்க வைத்தனர். என்னால் கடல் கடந்து சாதிக்க முடிகிறது என்றால் உங்களால் முடியாதா,'' என இவர் பேசிய போது மாணவர்களின் ஆரவாரம் பலமாக இருந்தது. இவர் வடஅமெரிக்க தமிழ் சங்க பேரவை தலைவர் விஜய் மணிவேல். அமெரிக்காவில் வங்கிகளில் பணிபுரிந்து தற்போது தொழில் முனைவோராக சாதித்து வருகிறார்.
மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி முன்னாள் மாணவரான இவருக்கு கல்லுாரியில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்க வந்தவர் தான் புலம் பெயர்ந்த கதை குறித்து மனம் திறந்ததாவது...
மதுரை சொந்த ஊர். இங்கு துவக்க கல்வியை துவக்கினேன். மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரியில் 1995-1997 எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தேன். பின் நண்பர்களுடன் பெங்களூருவுக்கு சென்றேன். அங்கு பாதுகாப்பு துறை கணினி பிரிவில் பயிற்சியாளராக சேர்ந்தோம். அங்கு வேலை செய்யும் போது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அவரது அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் எனக்கும், நண்பர்களுக்கும் ஐடியாக்கள் வழங்கினர். பயிற்சியுடன் படிப்பையும் மேற்கொண்டோம்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்திருந்ததால் அமெரிக்கா, சுவீடன் நாடுகளிலிருந்து சில வேலைவாய்ப்பு வந்தது. எனது சாய்ஸ் அமெரிக்காவாகவே இருந்தது. 1999 காலகட்டத்தில் அங்கு சென்ற போது என்ன செய்ய போகிறோம் என தெரிய வில்லை. ஆனாலும் சாதிக்க வேண்டும் என்ற ஒரு வேகம் இருந்தது. அப்போது தான் தகவல் தொழில்நுட்பத்துறை வளரத்துவங்கிய நேரம். அத்துறையை தேர்வு செய்தேன். பிறகு அமெரிக்காவிலுள்ள சில வங்கிகளில் வேலைவாய்ப்பு கிடைத்தது. பெடரல் ரிசர்வ் வங்கியில் இணைந்து எட்டு ஆண்டுகளாக பணிபுரிந்தேன்.
இந்தியாவில் இருந்த வரை தமிழ் குறித்து எனக்கு அவ்வளவு ஒரு ஈடுபாடு இல்லை. ஆனால் அமெரிக்கா சென்ற பிறகு தான் தமிழின் சிறப்பை அறிந்து கொள்ள முடிந்தது. அங்கு தமிழ் பேச ஆள் இருக்க மாட்டாங்க. நம்ம ஊர்க்காரர்களை பார்த்தால் தமிழ் பேச முடியும். அப்படி யாராவது நம்ம ஊர்க்காரர்களை பார்த்து விட்டால் போதும் தமிழில் பேச துவங்கி விடுவோம். அதுக்கு பிறகு தான் தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.
அமெரிக்காவில் மிசோரியில் நான் இருந்தாலும் வடஅமெரிக்காவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் தமிழர்கள் உள்ளனர். இதனால் பெரும்பாலான மாநிலங்களில் தமிழ் சங்கங்கள் இருந்தன. வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவை தான் பெரிய அமைப்பு. அதில் இணைந்து தமிழ் மொழிக்காக பல்வேறு பணிகளில் ஈடுபட்டோம். அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பேச வாய்ப்பு இருக்காது. பெற்றோருக்கும் தொழில் ரீதியாக ஆங்கில மொழியை தான் பயன்படுத்துவர். தமிழ் மொழி, கலை, இலக்கியம், மரபுக்கலைகள் வளர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழ் மக்களுக்கு ஏதாவது அவசர உதவி தேவைப்பட்டால் செய்து கொடுத்தும் வருகிறோம். இதற்காக அமெரிக்கன் தமிழ் அகாடமி என்ற அமைப்பையும் நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறோம்.
தமிழகத்திலிருந்து வந்தவர்கள் தொழில் செய்ய விரும்பினால் அவர்களுக்கு உதவ வடஅமெரிக்கா தமிழ் சங்க பேரவை மூலம் தொழில் முனைவோர் பிரிவையும் துவக்கியுள்ளோம். பல மாகாணங்களிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ன மாதிரி தொழில் செய்யலாம், அதற்கான வாய்ப்புகள் என்ன என்பது குறித்து பயிற்சியும் அளித்து வருகிறோம். இதுபோன்ற மொழி, தொழில், கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கு அமெரிக்க அரசும் பல்வேறு நிதியுதவிகளை வழங்குகிறது. அந்நிதியையும் இதுபோன்ற பணிகளுக்கு பயன்படுத்தி கொள்கிறோம்.
வேறு எந்த ஊருக்கும் இல்லாத சிறப்பு நம்ம மதுரைக்கு உண்டு. நாமும் வாழனும், மற்றவர்களையும் வாழ வைக்கனும். அதுதான் மதுரை மண்ணின் அறம். அதை மனதில் வைத்து நண்பர்களுடன் இணைந்து இதுபோன்ற பணிகளை செய்து வருகிறோம் என்றார். வாழ்த்த +1(314)406-0939