நடிகர் சயீப் அலிகான் தாக்குதல் வழக்கு; குற்றவாளியின் கைரேகையில் 'டுவிஸ்ட்'

7


மும்பை: நடிகர் சயீப் அலிகான் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டவரின் கை விரல் ரேகை, சம்பவம் நடந்த இடத்தில் பதிவான ரேகையுடன் ஒத்துப்போகவில்லை. இதனால் வழக்கை விசாரிக்கும் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.


மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ராவில், 'சத்குரு ஷரண்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், 54, வசித்து வருகிறார். நடிகர் சயீப் அலிகான் வீட்டுக்குள், கடந்த ஜனவரி 16ம் தேதி அதிகாலை மர்ம நபர் புகுந்து, கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சயீப் அலிகான், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.



இதற்கிடையே சயீபை கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபரை, கடந்த ஜன., 19ம் தேதி மும்பை போலீசார் கைது செய்தனர். அவரின் பெயர் ஷரிபுல் இஸ்லாம் முகமது அமின் பக்கீர், 30, என்பதும், வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. அவரிடம் இருந்த மொபைல் போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.


நடிகர் சயீப் அலிகான் வீட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட 19 கைரேகைகள், தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஷரிபுல் இஸ்லாமின் கைரேகைகளுடன் பொருந்தவில்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் போலீசார் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் ஷரிபுல் கைது செய்யப்பட்டாலும், கூடுதல் ஆதாரங்களை மும்பை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Advertisement