ரூ.500க்கு காஸ் சிலிண்டர், 300 யூனிட் இலவச மின்சாரம்: டில்லியில் சரமாரியாக அள்ளி விட்டது காங்கிரஸ்!

15

புதுடில்லி: டில்லியில் ஆட்சிக்கு வந்தால், 300 யூனிட் இலவச மின்சாரம், 500 ரூபாய்க்கு காஸ் சிலிண்டர்கள் மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்து உள்ளது.


மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டில்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ., இடையே பலத்த போட்டி நிலவினாலும், காங்கிரஸ் கட்சியும் தேர்தலில் முழு வீச்சில் மோதுகிறது.
ஆம் ஆத்மி கட்சி பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது. காங்கிரசும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறது.
ஏற்கனவே வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 8,500 உதவித்தொகை வழங்கப்படும். ரூ. 25 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு, பெண்களுக்கு மாதம் ரூ. 2500 வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்து உள்ளது.


இந்நிலையில், இன்று (ஜன.,16) டில்லியில் ஆட்சிக்கு வந்தால், 300 யூனிட் இலவச மின்சாரம், 500 ரூபாய்க்கு காஸ் சிலிண்டர்கள் மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்து உள்ளது.


இது குறித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், "டில்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாங்கள் அளித்த ஐந்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்" என உறுதியளித்தார்.
அப்போது, டில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement