அதிக குழந்தைகள் பெறுவோருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரணும்: சந்திரபாபு நாயுடு யோசனை
அமராவதி: அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வோருக்கே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டு உள்ளேன் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இது தொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
ஒரு காலத்தில், பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் அதிக குழந்தைகள் வைத்திருப்போர் போட்டியிட முடியாது. இப்போது நிலைமை மாறிவிட்டது. கொள்கையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
நான் சொல்வது என்னவென்றால், குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளை கொண்ட நபர்கள் போட்டியிட முடியாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.
இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே ஒரு நபர் கவுன்சிலர் அல்லது மேயராக முடியும் என்று சட்டத்தை மாற்றினால் மக்கள் தொகை குறைவதைக் கட்டுப்படுத்த முடியும்.
அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வோருக்கே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டு உள்ளேன். உங்கள் பெற்றோர்கள் நான்கு அல்லது ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். அதை நீங்கள் ஒரு குழந்தையாகக் குறைத்துவிட்டீர்கள். இதேபோல் உங்களது பெற்றோர்கள் நினைத்து இருந்தால் இந்த உலகத்திற்கு நீங்கள் வந்திருக்க முடியாது.
எல்லா நாடுகளும் இந்தத் தவறைச் செய்தன. சரியான நேரத்தில் நாம் முடிவெடுக்க வேண்டும். தற்போது, நிலைமை கையை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மக்கள் தொகை வீழ்ச்சியின் ஆபத்தை உணரவில்லை. வருமானத்தை அதிகரிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தி இப்போது சிக்கலில் உள்ளனர்.
தற்போது நமது மாநிலத்தில் 2047ம் ஆண்டுக்குப் பிறகு, அதிக வயதானவர்கள் இருப்பார்கள். ஒரு பெண் இரண்டுக்கும் குறைவான குழந்தைகளை பெற்றுக் கொண்டால் மக்கள் தொகை குறையும். நீங்கள் இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொண்டால் மக்கள் தொகை அதிகரிக்கும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.