ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்பச் சென்ற வங்கி ஏஜென்சி ஊழியர் சுட்டுக்கொலை; கர்நாடகாவில் பயங்கரம்
தார்வாட்: கர்நாடகாவில் ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்பச் சென்ற வங்கி ஏஜென்சி ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். அதன்பிறகு, கொள்ளையர்கள் பணப்பெட்டியை பைக்கில் வைத்து தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தார்வாட் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்புவதற்காக வங்கி ஏஜென்சி ஊழியர்கள் சென்றனர். வாகனத்தில் இருந்து இறங்கி, ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்ப, பணப்பெட்டியை எடுக்க முயன்றனர்.
அப்போது, அங்கு நின்றிருந்த மர்ம நபர்கள் வங்கி ஏஜென்சி ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
இதைத் தொடர்ந்து, பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு சென்று, பைக்கில் வைத்து எடுத்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதனை அங்கிருந்த மக்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர்.