முல்லைப் பெரியாறு அணை: புதிய கண்காணிப்பு குழு அமைப்பு


புதுடில்லி: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்புக்குழுவை மத்திய அரசு அமைத்து உள்ளது.


முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இவற்றில், அணையின் நீர்மட்டத்தை 120 அடிக்கும் குறைவாக குறைக்க வேண்டும் எனக்கோரி கேரளாவைச் சேர்ந்த மேத்யூ நெடும்பரா என்பவர் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இவருடன் சேர்த்து இன்னும் சில வழக்கறிஞர்கள், முல்லைப் பெரியாறு அணை விவகாரங்களில் மத்திய அரசையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்; வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை சுட்டிக்காட்டி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உடனடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட புதிய கோரிக்கைகளை முன்வைத்து சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் திபங்கர் தத்தா அமர்வில் கடந்த 8 ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய அளவிலான நிபுணர் குழுவை ஏன் அமைக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில், அணை தொடர்பாக 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழுவை மத்திய அரசு அமைத்து உள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு சட்டப்படி அமைக்கப்பட்ட இக்கண்காணிப்பு குழுவின் தலைவராக, தேசிய அணை பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகம் சார்பில், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மணிவாசன்

காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்ரமணி

கேரள கூடுதல் தலைமைச் செயலர் விஸ்வாஸ்

தலைமை பொறியாளர் உள்ளிட்ட 7 பேர் இக்குழுவில் இடம்பெற்று உள்ளனர். ஏற்கனவே உள்ள மேற்பார்வை குழுவுக்கு பதில் புதிய குழு அமைக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

Advertisement