ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்: என்ன காரணம்?
வாஷிங்டன்: அதானி உள்ளிட்ட பல நிறுவனங்களின் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்ட அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்படுகிறது.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், உலகின் பெரிய வர்த்தக நிறுவனங்களில் நடக்கும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2022ம் ஆண்டு அதானி நிறுவனம் முறைகேடு செய்ததாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய அரசியலில் பரபரப்பை உண்டாக்கிய இக்குற்றச்சாட்டை அதானி நிறுவனம் மறுத்து இருந்தது. செபி நிறுவனத்தின் தலைவர் மீதும் குற்றச்சாட்டை தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இந்த நிறுவனத்தை மூடப்போவதாக அதனை தோற்றுவித்த நாதே அண்டர்சன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஹிண்டன்பர்க் இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை மூட முடிவு செய்துள்ளேன். நாங்கள் பணியாற்றி வந்த அனைத்து திட்டங்களும் நிறைவு பெற்றதால், மூடுவது என்ற முடிவை எடுத்தேன். இந்த முடிவுக்கு பின்னால், எந்த வித மிரட்டலோ அல்லது தனிப்பட்ட விஷயங்கள் ஏதும் இல்லை. எங்களது நிறுவனத்தை சேர்ந்த சிலர் தனியாக ஆய்வு நிறுவனத்தை துவங்க உள்ளனர். அதனை நான் ஆதரிக்கிறேன். ஆனாலும், அதில் எனது பங்கு ஏதும் இருக்காது. மற்றவர்கள் ஏஜென்ட்களாக பணியாற்ற முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.