பைனலில் இந்திய அணிகள் * 'கோ கோ' உலக கோப்பை தொடரில்

புதுடில்லி: 'கோ கோ' உலக கோப்பை பைனலுக்கு இந்திய, ஆண்கள் பெண்கள் அணி முன்னேறின.
இந்தியாவில் 'கோ கோ' உலக கோப்பை முதல் சீசன் நடக்கிறது. 23 நாடுகள் சார்பில் 20 ஆண்கள், 19 பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன. ஆண்கள், பெண்கள் அணிகள், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. பெண்கள் பிரிவில் இந்திய அணி, 'ஏ' பிரிவில் இடம் பெற்றது.
லீக் சுற்றில் மோதிய 3 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா, 9 புள்ளியுடன் பட்டியலில் முதலிடம் பிடித்து காலிறுதிக்குள் நுழைந்தது. இதில் 106-16 என வங்கதேசத்தை வீழ்த்தியது. நேற்று நடந்த அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி, தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டது.
துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, முதல் பாதியில் 33-10 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த இந்திய அணி, 66-16 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் நேபாள அணி, 89-18 என உகாண்டாவை வென்றது. இன்று நடக்கும் பைனலில் இந்தியா, நேபாளம் மோதுகின்றனர்.
ஆண்கள் அபாரம்
இந்திய ஆண்கள் அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றது. பங்கேற்ற 4 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா, 12 புள்ளியுடன் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. இதில் 100-40 என இலங்கையை வீழ்த்தி, அரையிறுதிக்குள் நுழைந்தது. நேற்று நடந்த அரையிறுதியில் இந்திய அணி 62-42 என தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் நேபாளம் 72-20 என ஈரானை வென்று, பைனலுக்குள் நுழைந்தது.

Advertisement