பத்து கட்டளை: ரோகித் சர்மா எதிர்ப்பு * ரகசிய பேச்சு அம்பலம்

1

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விதிக்கப்பட்ட 10 கட்டளைக்கு, கேப்டன் ரோகித் சர்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் அரங்கில் இந்திய அணியின் செயல்பாடு திருப்தியாக இல்லை. நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இழந்தது. இதையடுத்து, உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும், வெளிநாட்டு தொடர் 45 நாளுக்கு மேல் இருந்தால், மனைவி, குழந்தைகளுக்கு (18 வயதுக்குட்பட்ட) 14 நாள் மட்டும் அனுமதி உட்பட 10 கட்டளைகள் விதிக்கப்பட்டன. இதை பின்பற்ற தவறும் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., நடத்தும் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும்.
இந்த கட்டளைகள் ரோகித், கோலி, பும்ரா போன்ற சீனியர் வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவர்கள் உள்ளூர் தொடரில் பங்கேற்பது இல்லை. வெளிநாட்டு தொடரின் போது குடும்பத்தினரை அழைத்துச் செல்வர்.
பதிவான ரகசிய பேச்சு
இது பற்றி நேற்று சாம்பியன்ஸ் டிராபி தொடர்பான செய்தியாளர் சந்திப்புக்கு முன், தனக்கு அருகில் அமர்ந்திருந்த தேர்வுக்குழு தலைவர் அகார்கரிடம் ரோகித் சர்மா தனிப்பட்ட முறையில் பேசினார். அப்போது,'வெளிநாட்டு தொடரின் போது குடும்பத்தினரை அழைத்து செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு குறித்து, சக வீரர்கள் என்னிடம் விளக்கம் கேட்கின்றனர். பி.சி.சி.ஐ., செயலர் தேவஜித் சைக்கியாவை சந்தித்து விவாதிக்க வேண்டும்,''என்றார். நேரலை என்பதை உணராமல் ரோகித் பேசிவிட்டார். அங்கிருந்த மீடியா 'மைக்கில்' அனைத்தும் பதிவாக ரோகித் எதிர்ப்பு அம்பலமானது. அகார்கர் உடன் ரோகித் பேசிய 'வீடியோ 'வைரல்' ஆனது.
இவ்விஷயம் குறித்து ரோகித்திடம் செய்தியாளர்கள் கேட்ட போது ஆத்திரப்பட்டார். இவர் கூறுகையில்,''புதிய விதிமுறைகள் பற்றி உங்களுக்கு யார் சொன்னார்கள். பி.சி.சி.ஐ., தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கட்டும். அதற்கு பின் விரிவாக பேசுவோம்,''என்றார்.
அகார்கர் விளக்கம்
பின் அகார்கர் கூறுகையில்,''கடந்த சில மாதங்களாக இந்திய அணியின் முன்னேற்றம் பற்றி விவாதித்தோம். நமது வீரர்கள் சர்வதேச அளவில் 'சூப்பர் ஸ்டார்' அந்தஸ்து பெற்றவர்கள். இந்தியாவின் பிரதிநிதிகளாக களமிறங்குகின்றனர். இதை மனதில் வைத்து சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இது பள்ளி அல்ல. இவை தண்டனையும் கிடையாது. அணியில் ஒழுக்கம், ஒற்றுமை ஏற்படுத்த முயற்சிக்கிறோம்,''என்றார்.

10 ஆண்டுக்கு பின்
புதிய விதிமுறை காரணமாக, உள்ளூர் போட்டியில் 10 ஆண்டுகளுக்கு பின் ரோகித் சர்மா (மும்பை) விளையாட உள்ளார். மும்பையில் நடக்க உள்ள ரஞ்சி கோப்பை போட்டியில் (எதிர், ஜம்மு காஷ்மீர், ஜன. 23-26) பங்கேற்க இருக்கிறார். கடைசியாக 2015ல் ரஞ்சி போட்டியில் (எதிர் உ.பி.,) விளையாடினார். சாம்பியன்ஸ் டிராபி (ஒருநாள் போட்டி) நடக்க உள்ள நேரத்தில் ரஞ்சியில் பங்கேற்பது புரியாத புதிராக உள்ளது.
இது பற்றி ரோகித் கூறுகையில்,'' மூன்றுவித கிரிக்கெட் விளையாடும் நிலையில், அதற்கு ஏற்ப மாறிக் கொள்வது சகஜம். 2019ல் இருந்து தொடர்ந்து டெஸ்டில் பங்கேற்கிறேன். சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது, உள்ளூர் தொடரில் பங்கேற்க நேரம் கிடைப்பதில்லை,''என்றார்.

காம்பிர் நம்பிக்கை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் இருந்து ரோகித் சர்மா விலகினார். இதற்கு பயிற்சியாளர் காம்பிர் கொடுத்த நெருக்கடியே காரணம் என கூறப்பட்டது. இது குறித்து ரோகித் கூறுகையில்,''எங்களுக்குள் நல்லுறவு உள்ளது. களத்தில் கேப்டன் செயல்பாடு மீது காம்பிருக்கு நம்பிக்கை உண்டு. போட்டிக்கான வியூகம், அதன் பின்னணியில் நடக்கும் விஷயங்கள் பற்றி வெளிப்படையாக தெரிவிக்க இயலாது,''என்றார்.

Advertisement