இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் இன்று அமல்!

கெய்ரோ, இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம், இன்று காலை முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, 33 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் பயங்கரவாதிகள் முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு ஈடாக, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 737 பாலஸ்தீனியர்கள் விடுதலையாகின்றனர்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023 அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். அப்போது, 200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை அவர்கள் கடத்திச் சென்றனர்.

மத்தியஸ்தம்



இதனால் கோபமடைந்த இஸ்ரேல், காசா மீது தாக்குதலை தொடர்ந்தது. அந்நாட்டு படைகள் நடத்திய தாக்குதல்களில், காசாவில், 40,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே, அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்து வந்தன.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப், நாளை பதவியேற்க உள்ள நிலையில், விரைவில் போரை நிறுத்தவில்லை என்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சமீபத்தில் எச்சரித்திருந்தார்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே, 15 மாதங்களாக மோதல் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் போர் நிறுத்தம் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, 42 நாட்களுக்கு போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

இந்த ஒப்பந்தத்தில், பிணைக்கைதிகளை விடுவிப்பது, இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுவிப்பது, காசா எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் படைகளை படிப்படியாக திரும்பப் பெறுவது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

ஒப்புதல்



போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த போர் நிறுத்தம், இன்று காலை அமலுக்கு வருகிறது.

இதன்படி, போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் 42 நாட்களில், 33 பிணைக்கைதிகளை விடுவிக்க, ஹமாஸ் பயங்கரவாதிகள் முடிவு செய்துள்ளனர். இதில், பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

முதல் நாளான இன்று, மூன்று பெண் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ள நிலையில், ஏழாம் நாளில், நான்கு பேரும்; அடுத்த ஐந்து வாரங்களில், மீதமுள்ள 26 பேரையும் விடுவிக்க ஹமாஸ் பயங்கரவாதிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதற்கு ஈடாக, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள, 737 பாலஸ்தீனியர்களை, அந்நாடு விடுதலை செய்கிறது. மேலும், சிறைகளில் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் உடல்களை ஒப்படைக்கவும் இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.

உதவிகள்



காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுதுமாக திரும்ப பெறப்படும் வரை, மீதமுள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க மாட்டோம் என, ஹமாஸ் பயங்கரவாதிகள் திட்டவட்டமாக தெரிவித்துஉள்ளனர்.

இந்த போர் நிறுத்த காலத்தில், காசாவில் மனிதாபிமான உதவிகளை செய்ய ஐ.நா., திட்டமிட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இன்று மாலை மூன்று பெண் பிணைக்கைதிகளை ஹமாஸ் பயங்கரவாதிகள் விடுவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement