மதுரை, திருச்சியில் 'டைடல் பார்க்' கட்டுமானம் துவங்க அனுமதி

சென்னை:மதுரை, திருச்சி மாவட்டங்களில், தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனம், 'டைடல் பார்க்' கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளது.

சென்னையில் இருப்பது போல தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை மாநிலம் முழுதும் உருவாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, சென்னை தரமணியில் உள்ளது போல், முக்கிய நகரங்களில் டைடல் பார்க்குகள் கட்டப்பட்டு வருகின்றன.

திருச்சியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அருகில், 6 லட்சம் சதுர அடியில், ஆறு தளங்களுடன் டைடல் பார்க் கட்டப்பட உள்ளது. மதுரையில், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில், 5.34 லட்சம் சதுர அடியில், 12 தளங்களுடன் கட்டப்படுகிறது.

அவற்றில் உள்ள அலுவலகங்கள் ஐ.டி., நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்படும். இரண்டு டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரப்பட்டு, தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது.

தற்போது, மதுரை, திருச்சியில் டைடல் பார்க் கட்டும் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி, தமிழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, விரைவில் ஒப்பந்த நிறுவனங்களை தேர்வு செய்து, கட்டுமான பணிகள் துவக்கப்பட உள்ளன.

Advertisement