இந்தியர்களுக்கு வேலை விசா விதிகளை கடுமையாக்கியது சவுதி
ரியாத்:இந்தியர்கள் வேலைக்கான விசா கேட்டு விண்ணப்பிக்கும் போது, தொழில்முறை மற்றும் கல்வித் தகுதிகளை முன்னரே சரிபார்த்து உறுதி செய்வதை சவுதி அரேபியா கட்டாயமாக்கி உள்ளது. இந்த நடைமுறை, கடந்த 14ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான சவுதி அரேபியா, வரும் 2030ம் ஆண்டுக்குள் தன் தொழிலாளர் சந்தையை மேம்படுத்தவும், அதில் உயர் தரத்தை பராமரிக்கும் இலக்கை அடையவும் புதிய நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்து உள்ளது.
ஆறு மாதங்களுக்கு முன்னரே, தொழிலாளர் சந்தையில், தொழிலாளர்கள் வருகையை கட்டுப்படுத்துவது, பயிற்சி மையங்களின் வரையறுக்கப்பட்ட திறன் மற்றும் உயர்தர தொழில்முறையை உறுதி செய்யும் நடவடிக்கையாக இதனை முன்மொழிந்திருந்தது.
இதன்படி, சவுதி அரேபிய நிறுவனங்களின் உரிமையாளர் அல்லது மனிதவள மேலாளர், இந்திய தொழிலாளர்களின் தொழில் மற்றும் கல்வித்தகுதி விபரங்களை உறுதி செய்வது இனி கட்டாயமாகிறது.
சவுதி அரேபியாவில் வாழும் வெளிநாட்டவர்களில், வங்கதேசத்தினருக்கு அடுத்ததாக, இந்தியர்கள் இரண்டாவது இடம் பிடித்துள்ளனர்.
அங்கு கிட்டத்தட்ட 24 லட்சம் இந்தியர்கள் பணிபுரிந்து வருவதாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தரவுகளில் கூறப்பட்டுஉள்ளது.