வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் 3வது பாதையை நீட்டிக்க திட்டம்
வடமதுரை: வடமதுரை ரயில்வே ஸ்டேஷனில் உள்ள 3வது பாதையை நீட்டிக்க நிலங்களை ஆர்ஜிதம் செய்யும் பணி துவங்கி உள்ளது.
திண்டுக்கல் - விழுப்புரம் இருவழி ரயில் பாதை திட்டம் 2012ல் துவங்கியபோது வடமதுரையை ஹால்ட் ஸ்டேஷனாக தரம் குறைக்க திட்டமிட்டனர். இப்பகுதியினர் விடாமுயற்சியால் கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய முழுமையான ஸ்டேஷனாக செயல்பட ரயில்வே அனுமதித்தது.
இரட்டை பாதை பணி திட்டத்தில் இறுதியாக சேர்ந்ததால் வடமதுரையில் குறைந்த துார துணை பாதை, ஜல்லி டெப்போவுக்கு ஒரு 'பிட் லைன்' மட்டும் கூடுதலாக அமைந்தது. வேகமான செல்லும் ரயிலுக்கு வழிவிட சரக்கு, பாசஞ்சர் ரயில்களை 3வது பாதையில் நிறுத்தி வைக்கும் அளவிற்கு நீளம் இல்லை. இதனால் அய்யலுாருக்கு அடுத்து தாமரைப்பாடியே இவ்வாறான பணிக்கு பயன்படுகிறது. இதனால் பல நிமிடங்கள் முன்கூட்டியே அய்யலூரிலே சில ரயில்களை நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பகுதிக்குள் செந்துறை ரோடு குறுக்கிடுவதால் அங்கு துணை பாதையில் ரயில்கள் நீண்ட நேரம் நிறுத்தினால் லெவல்கிராசிங் கேட்டும் திறக்கப்படாமல் பல கிராமமக்கள், பஸ், இதர வாகன போக்குவரத்தும் அதிக தாமதமாகி தவிக்கின்றனர். இதனால் வடமதுரையில் நீளமான ரயில்களை நிறுத்தி வைத்து அனுப்பும் வசதியை ஏற்படுத்த இங்குள்ள 3வது பாதையை நீட்டிக்க தேவையான நிலங்களை ஆர்ஜிதம் செய்யும் பணி துவங்கி உள்ளது.