வேடசந்துாரில் மாட்டுச்சந்தைக்கு தடை போடும் மாவட்ட நிர்வாகம் விவசாயிகள், கறவை மாடு வளர்ப்போர் கொந்தளிப்பு

வேடசந்துார்: வேடசந்துார் அய்யர் மடத்தில் விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க மாட்டுச்சந்தை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் தலையீடு காரணமாக மாட்டுச்சந்தை அமைக்கும் செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் , கால்நடை வளர்ப்போர் கொந்தளிப்பில் உள்ளனர்.

வி.புதுக்கோட்டை ஐயர்மடம் பகுதியில் மாட்டுச்சந்தை அமைக்க வி.புதுக்கோட்டை ஊராட்சி தலைவருக்கு 2024ல் விவசாய சங்கத்தால் அளிக்கப்பட்ட மனுவில் , இங்கு கால்நடை சந்தை இல்லாத நிலையில் விவசாயிகள் ஒரு மாட்டை விற்க வாங்க 20 முதல் 60 கி.மீ.,துாரம் உள்ள ஒட்டன்சத்திரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது என குறிப்பிட்டிருந்தனர்.

இதை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் அரசுக்கு சொந்தமான 2 ஏக்கரில் கால்நடை சந்தை அமைக்க ஊராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றி ஊராட்சி உதவி இயக்குனருக்கு அனுப்ப பட்டது

ஊராட்சி உதவி இயக்குனர் கூறிய குறைபாடுகள் முழுமையாக சரி செய்யப்பட்டு வட்டார வளர்ச்சி அதிகாரியிடமும் மனு அளிக்கப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு செய்து முடித்த நிலையில் கால்நடை சந்தை அமைக்க அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ஊராட்சி நிர்வாகம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தது.

விசாரித்த நீதிமன்றம் மனு மீது 3 வார காலத்தில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும்படி திண்டுக்கல் கலெக்டருக்கு உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் மாவட்ட நிர்வாகம் எந்த விதமான விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காமல் தொடரந்து காலதாமதம் செய்வதாக கூறும் விவசாயிகள் அரசியல் தலையீடு காரணமாகத்தான் இப்பணிகள் தடைபடுவதாக புகார் கூறுகின்றனர்.

வேடசந்துார் வட்டார விவசாயிகள் நலச்சங்கம் பொருளாளர் ஆர். செல்வன் கூறியதாவது:

வேடசந்துார், குஜிலியம்பாறை தாலுகா பகுதி விவசாயிகளின் நலன் கருதி

அய்யர்மடம் பகுதியில் கால்நடைகளுக்கான வாரச் சந்தை அமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். இதில் அரசியல் தலையீடு ஏற்புடையது அல்ல. மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் விவசாயிகளை அலைக்கழிக்கிறது என்றார்.

Advertisement